பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை: மாமல்லபுரம் கடற்கரையில் தூய்மைப் பணி
By DIN | Published on : 23rd September 2019 12:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11-இல் வருகை தருவதை முன்னிட்டு, மாமல்லபுரம் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுடன், தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களும் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்திற்கு வரும்போது, மீனவர்கள் வசிக்கும் பகுதியில் பிரதமர் மோடி மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
இதற்காக மாமல்லபுரம் மீனவர் குப்பம் பகுதி கடற்கரையில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுடன் அலைசறுக்கு நிறுவனத்தின் ஊழியர்கள் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அலை சறுக்கு பயிற்சியாளர் முகேஷ், டிவிஎஸ் சுந்தரம் லிமிடெட் நிறுவன உதவி மேலாளர் வனிதா கார்த்திகேயன், மாமல்லபுரம் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மேற்பார்வையில் 50 பேர் கொண்ட குழுவினர் கடற்கரையை தூய்மை செய்தனர்.
கடற்கரையில் குவிந்து கிடந்த நெகிழிகள் மற்றும் காகிதக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி தூய்மைப் படுத்தி வருகின்றனர்.