மேல்மருவத்தூரில் நவராத்திரி விழா தொடக்கம்
By DIN | Published On : 29th September 2019 12:53 AM | Last Updated : 29th September 2019 11:23 AM | அ+அ அ- |

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா சனிக்கிழமை தொடங்கியது. சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் அகண்ட தீபம் ஏற்றி விழாவைத் தொடக்கி வைத்தார்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மங்கல இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தங்கக் கவசத்தால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பகல் 11.30 மணிக்கு சித்தர் பீடம் வந்த அடிகளாருக்கு மேளதாளம் முழங்க, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அருட்கூடம் சென்ற அடிகளார் ஈர செவ்வாடையுடன் வந்து அம்மனுக்கு சிறப்புப் பூஜைகளை செய்து, அகண்ட தீபத்தை ஏற்றினார்.
பின்னர், சப்த கன்னியர் சந்நிதி அருகே பறவை வேடம் அணிந்து நடனமாடிய பள்ளி மாணவிகளில் 2 பேர் அகண்ட தீபத்தை ஏந்தி வந்த போது பல்வகை திருஷ்டி பூஜைகள் செய்யப்பட்டன. மாணவிகளுக்கு அடிகளாரும், லட்சுமி பங்காரு அடிகளாரும் ஆசி வழங்கினர்.
புற்று மண்டபம் முன்பு மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பள்ளி மாணவி காட்சியளித்தார். பகல் 12.15 மணிக்கு கருவறை தென்கிழக்கு திசையில் உள்ள அக்னி மூலையில் அகண்ட தீபம் வைக்கப்பட்டு, அதில் அடிகளார் முக்கூட்டு எண்ணெய் ஊற்றினார்.
இவ்விழாவை முன்னிட்டு வரும் அக். 8-ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 4 மணிக்கு புரட்டாசி அமாவாசை வேள்வி பூஜைகள் நடைபெற்றன.
விழாவில் பாதுகாப்புப் பணிகளை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் கோ.ப செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் இயக்க நிர்வாகிகளும், சென்னை சாலிகிராமம், எண்ணூர் சக்தி பீட நிர்வாகிகளும் செய்துள்ளனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G