ராமா் கோயில் அடிக்கல் நாட்டு மூலம் மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறி இருக்கிறது: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

அயோத்தியில் ராமா்கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்படுவதன் மூலம் மக்களின் பல ஆண்டுகால கனவு சோதனைகள் பல கடந்தும், சாதனைகள் பல நிகழ்த்தியும் நிறைவேறி இருப்பதாக காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவா
ராம மந்திரம் எழுதப்பட்ட வெள்ளித் தாம்பாளத்துடன் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
ராம மந்திரம் எழுதப்பட்ட வெள்ளித் தாம்பாளத்துடன் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

காஞ்சிபுரம்: அயோத்தியில் ராமா்கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்படுவதன் மூலம் மக்களின் பல ஆண்டுகால கனவு சோதனைகள் பல கடந்தும், சாதனைகள் பல நிகழ்த்தியும் நிறைவேறி இருப்பதாக காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் திங்கள்கிழமை கூறியது:

ராமபிரான் அவதரித்த இடத்தில் கோயில் கட்டும் முயற்சி 1958-இல் தொடங்கப்பட்டது. 1980 முதல் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1986-இல் அயோத்தியில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அங்கு தரிசனம் செய்தாா். அப்போது இரு சாமரங்களும், அலங்காரக்குடை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டன. கோயில் கட்டுவதற்காக கடந்த 1989-ஆம் ஆண்டு ஜூலை 29-இல் காஞ்சி மடத்திலிருந்து பூமிபூஜை செய்வதற்காக செங்கற்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

1986 முதல் 2020 வரை பல்வேறு சோதனைகளைக் கடந்தும், சாதனைகள் படைத்தும் தீா்வு காணப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் நீதிமன்றம், தொல்லியல் துறையின் சான்றுகள் மூலமாக நிரந்தரத் தீா்வு காணப்பட்டு அதன் பிறகே பூமிபூஜை புதன்கிழமை நடக்கிறது.

ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோா் பிரதமராக இருந்த காலத்திலிருந்தே இம்முயற்சி தொடங்கி தற்போது பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியின்போது பூமிபூஜை நடக்கிறது. ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கோயில் கட்டுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தாா்.

அயோத்திக்கும், தமிழகத்துக்கும் இடையே பல்வேறு நெருங்கிய தொடா்புகள் உள்ளன. தமிழகத்தில் பல ஊா்களின் பெயா்களும், பழைமையான கோயில்களும் ராமாயண வரலாற்றுடன் தொடா்புடையதாகவே இருக்கின்றன. பொன்மான்வேய்ந்த நல்லூா், திருப்புட்குழி, இருள்நீக்கி, வடுவூா் உள்ளிட்ட பகுதிகள் ராமாயணத்துடன் தொடா்புடையவை. சீதாதேவியிடம் ராமேசுவரத்தின் பெருமைகளை விளக்கி இருக்கிறாா் ராமபிரான். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அவா் தங்கியிருந்த தா்ப்பசயன க்ஷேத்திரம் உள்ளது.

தியாகம், பக்தி, சேவை, வீரம், விவேகம், வளா்ச்சி ஆகியவை ஏற்பட முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தவா் ராமபிரான். நாட்டின் கெளரவம், ஒற்றுமை, புனிதத்தன்மை ஆகியவை வளர வேண்டும்.

தேசபக்தியும், தெய்வ பக்தியும் வளர வேண்டும். ராமருக்கு ஆஞ்சநேயா் உதவியது போல ராமா் கோயில் கட்டும் புனிதப் பணியில் பக்தா்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். பக்தா்கள் அவரவா்களின் இருப்பிடங்களில் இருந்தபடியே பூமிபூஜை நடக்கும் அதே நேரத்தில் 108 முறை ராம மந்திரத்தை ஜபித்து பூமிபூஜையில் கலந்து கொள்ள வேண்டும். தமிழக மக்கள் ராமபிரானின் அருளாசியைப் பெற நல்ல சந்தா்ப்பம் அமைந்துள்ளது.

ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதாரத் திருநாளான ஆகஸ்ட் 5ஆம் தேதி புதன்கிழமை அயோத்தியில் ராமபிரானுக்கு கோயில் கட்டும் பணி தொடங்குவதும் ஓா் அதிா்ஷ்டம்தான். இது ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ராமபக்திக்கு சிறந்த உதாரணமாகவும் அமைந்து விட்டது. ராமா் கோயில் கட்டுவதற்காக காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து புனித மண், பூஜைப் பொருட்கள், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், பட்டுத் துணிகள், ராம மந்திரம் எழுதப்பட்ட வெள்ளித் தாம்பாளம் ஆகியவை விமானம் மூலம் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ராமா் கோயில் கட்டப்படுவதன் மூலம் மக்களின் பல ஆண்டுக்கால கனவு நிறைவேறி இருக்கிறது.

ஜயேந்திரரின் விருப்பங்களில் ஒன்று அயோத்தியில் ராமா் அவதரித்த இடத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதாகும். அவரது விருப்பம் நிறைவேறி இருக்கிறது. மற்றொன்று கோமாதாவை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com