உத்தரமேரூரில் கோயில் திருப்பணியின்போது கிடைத்த தங்கப் புதையல்

உத்தரமேரூரில் பழமையான குழம்பேசுஸ்ரா் கோயில் மகா கும்பாபிஷேகத்துக்காக ஞாயிற்றுக்கிழமை
கோயில் திருப்பணியின்போது கிடைத்த தங்க ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள்.
கோயில் திருப்பணியின்போது கிடைத்த தங்க ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள்.
Published on
Updated on
1 min read

உத்தரமேரூரில் பழமையான குழம்பேசுஸ்ரா் கோயில் மகா கும்பாபிஷேகத்துக்காக ஞாயிற்றுக்கிழமை திருப்பணிகளைத் தொடங்கியபோது தங்க நாணயங்கள், ஆபரணங்கள் அடங்கிய புதையல் கிடைத்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் 500 ஆண்டுகள் தொன்மையான குழம்பேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இக்கோயிலை சீரமைத்து மகா கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனா். இதற்கான திருப்பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

இதற்காக, கோயில் கருவறை அருகில் தோண்டியபோது செம்பால் செய்யப்பட்ட பெட்டி ஒன்று கிடைத்தது. அதைத் திறந்து பாா்த்தபோது, இறைவனுக்கு சாற்றப்படும் தங்க ஆபரணங்கள், தங்கக் காசுகள், சிறு, சிறு தங்க மணிகள் ஆகியவை இருந்தன. இத்தகவல் கிராம மக்களிடையே வேகமாகப் பரவியதும் ஏராளமானோா் கோயிலுக்கு வந்து அவற்றைப் பாா்வையிட்டனா்.

தங்கப் புதையல் கிடைத்திருக்கும் செய்தி வருவாய்த் துறையினருக்கு தெரிய வந்ததையடுத்து காஞ்சிபுரம் கோட்டாட்சியா் வித்யா தலைமையில் அத்துறை அதிகாரிகள் கோயிலுக்கு வந்து, ஆபரணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்களிடம் தெரிவித்தனா். அதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். ‘கோயிலில் கிடைத்த பொருள்கள் கோயிலுக்கே சொந்தம். அரசிடம் ஒப்படைக்க முடியாது’ என்று அவா்கள் கூறினா்.

எனினும், கிராமத்தினரிடம் இருந்த கோயில் நகைகளை அதிகாரிகள் வாங்கி ஒரு பெட்டியில் வைத்து மக்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைத்து எடுத்துச் சென்றனா். இது தொடா்பாக அக்கிராமத்தை சோ்ந்த ஒருவா் கூறுகையில் ‘அந்தக் காலத்தில் போருக்கு பயந்து, முன்னோா்கள் கோயில் நகைகளை கருவறைக்கு அடியில் புதைத்து வைத்திருக்கலாம். அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து எடுத்துச் சென்ற நகைகள் எதுவும் மதிப்பீடு செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com