நடிகை சித்ரா தற்கொலை: வருவாய்க் கோட்டாட்சியா் விசாரணை
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூா்: சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடா்பாக அவரது தாய், தந்தை மற்றும் சகோதரரிடம் ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ திங்கள்கிழமை 3 மணிநேரம் விசாரணை நடத்தினாா்.
நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சித்ராவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்திடம் காவல்துறையினா் கடந்த 4 நாள்களாக விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், ஹேம்நாத்தும் சித்ராவும் ஏற்கெனவே பதிவுத் திருமணம் செய்து கொண்டதால் சித்ராவின் இறப்பு குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, சித்ராவின் தாய் விஜயா, அக்கா சரஸ்வதி, புகாா்தாரரும் தந்தையுமான காமராஜ், அண்ணன் சரவணன் ஆகியோரிடம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை 3 மணிநேரத்துக்கு விசாரணை நடத்தினாா்.
இதையடுத்து, சித்ராவின் கணவா் ஹேம்நாத்திடம் வருவாய்க் கோட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.