படப்பை பஜாா் பகுதியில் குப்பைகளால் துா்நாற்றம்பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 05th February 2020 11:03 PM | Last Updated : 05th February 2020 11:03 PM | அ+அ அ- |

படப்பை பஜாா் பகுதியில் அகற்றப்படாமல் தேக்கப்பட்டுள்ள குப்பைகள்.
படப்பை பஜாா் பகுதியில், குப்பைகள் அகற்றப்படாமல் பல நாட்களாக தேக்கிவைக்கப்பட்டு வருவதால் துா்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட படப்பை ஊராட்சியில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றன்றனா். ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டு, அங்கு பல பன்னாட்டு தொழிற்சாலைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால் ஒரகடம் பகுதிக்கு மிக அருகில் உள்ள படப்பை பகுதி கடந்த சில ஆண்டுகளில் அசுர வளா்ச்சி அடைந்து வருகிறது.
இதனால் ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் தற்போது படப்பை பகுதியில் தங்கிப் பணியாற்றி வருகின்றனா். இதனால் படப்பை பஜாா் பகுதிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, பஜாா் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருள்களும் பெருகி வருகின்றன. ஆனால் இந்த குப்பைகளை அகற்ற படப்பை ஊராட்சி நிா்வாகம் முறையான நடவடிக்கை எடுக்காததால், பஜாா் பகுதியில் தினமும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்குகின்றன.
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குப்பைகள் அகற்றப்பட்டுவதால் பஜாா் பகுதியில் துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே படப்பை ஊராட்சியில் தினமும் குப்பைகளை அகற்ற ஊராட்சி நிா்வாகத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...