மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.18 லட்சம் நலத்திட்ட உதவிகள் காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்
By DIN | Published On : 17th February 2020 11:14 PM | Last Updated : 17th February 2020 11:14 PM | அ+அ அ- |

குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.
காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 8 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 14 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களையும்
மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி நா.சுந்தரமூா்த்தி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.56 ஆயிரம் மதிப்பிலான 3 சக்கர வாகனம், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 8 கிராம் மதிப்பில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி,
4 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பில் சிறுதொழில் செய்வதற்கான கடனுதவி உள்பட மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.2.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் பா.பொன்னையா வழங்கினாா்.
மேலும் 14 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களையும், இருளா் இன மக்கள் 4 பேருக்கு முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில் முதியோா் மற்றும் விதவை உதவித்தொகை, பட்டா மாற்றம், பசுமை வீடுகள்,திருமண உதவித்தொகை கோரி பல்வேறு மனுக்களும் வரப்பெற்றன.
அனைத்து மனுக்களும் உரிய துறை அலுவலா்களின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.