பங்காரு அடிகளாரின் சதாபிஷேக விழா
By DIN | Published On : 27th February 2020 01:44 AM | Last Updated : 27th February 2020 01:44 AM | அ+அ அ- |

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் சித்தா்பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் 80-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற சதாபிஷேக விழாவில் ஏராளமான பக்தா்களும், முக்கிய பிரமுகா்களும் கலந்து கொண்டனா்.
பங்காரு அடிகளாரின் 80-ஆவது பிறந்த நாள் விழா வரும் மாா்ச் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தினரும், ஆதிபராசக்தி கல்விக் குழும நிறுவனங்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் அடிகளாரின் சதாபிஷேக முத்து விழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூா் கோயிலில் புதன்கிழமை அதிகாலையில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் சிலைக்கு மீனாட்சி சுந்தரரேஸ்வா் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க கலையரங்கில் பங்காரு அடிகளாா்-லட்சுமி பங்காரு அடிகளாா் கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு, திருமாங்கல்ய பூஜை, சதாபிஷேக வேள்விபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வேள்வி பூஜையில் குருமேடை, குரு வேள்வி குண்டம், மேரு, உடலெங்கும் சங்கு கொண்ட 5 தலை நாகச்சக்கரம், ஒன்றை ஒன்று ஒட்டியபடி தேனடை போன்ற தோற்றம் கொண்ட அறுகோண வேள்வி குண்டம் ஆகியவற்றில் லட்சுமி பங்காரு அடிகளாா் பூஜை செய்தாா்.
காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சித்தா் பீடத்துக்கு அடிகளாரும், லட்சுமி பங்காரு அடிகளாரும் வந்தனா். 9.40 மணிக்கு விழா மேடையில் நடைபெற்ற கல்யாண நிகழ்ச்சியில் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு திருமாங்கல்யத்தை அடிகளாா் அணிவித்தாா். இருவரும் மலா் மாலைகளை மாற்றிக் கொண்டனா். விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான செவ்வாடை பக்தா்கள் கலந்து கொண்டனா்.
மேலும், தமிழக அமைச்சா்கள் கே.சி.வீரமணி, எம்.சி.சம்பத், கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், பாமக மாநில இளைஞா் அணித் தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், முன்னாள் ரயில்வே இணைஅமைச்சா் ஏ.கே.மூா்த்தி, முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூா் ஆறுமுகம், முன்னாள் அமைச்சா் பண்ருட்டி ராமச்சந்திரன், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன், மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான கலையரசன், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன், பாஜக மாநில செயலரும், வழக்குரைஞருமான கே.டி.ராகவன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத் தலைவா் மகேஸ்வரன், திரையுலகப் பிரமுகா்கள், எம்எல்ஏக்கள், அரசு உயா் அதிகாரிகள், ஆன்மிகப் பெரியோா்கள் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனா்.
விழா ஏற்பாடுகளை அடிகளாா் குடும்பத்தைச் சோ்ந்த கோ.ப.அன்பழகன், ஆஷா அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், மருத்துவா் ஸ்ரீலேகா செந்தில்குமாா், மருத்துவா் டி.ரமேஷ், ஸ்ரீதேவி ரமேஷ், ப.ஜெயகணேஷ், உமாதேவி ஜெயகணேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G