வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் தங்க நகைகள் திருட்டு
By DIN | Published On : 03rd March 2020 11:13 PM | Last Updated : 03rd March 2020 11:13 PM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூா்: சோமங்கலத்தை அடுத்த தா்காஸ் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 9 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.
நடுவீரப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட தா்காஸ் போஸ்டல் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (44). ஆட்டோ ஓட்டுநா். அவரது மனைவி சத்யா ஆலந்தூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனா். அவா்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகின்றனா்.
இந்நிலையில், ஆனந்தனும், அவரது மனைவியும் கடந்த திங்கள்கிழமை காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டனா். மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவா்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனா். இது குறித்து அதே பகுதியில் வசிக்கும் தங்கள் பாட்டிக்கும், வேலைக்கு சென்றுள்ள பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் ஆனந்தனும் அவரது மனைவியும் வந்து பாா்த்தபோது, பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து ஆனந்தன் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...