

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டேங்கா் லாரிகள் மூலம் குறைந்த விலைக்கு டீசல் விற்பனை செய்யப் பயன்படுத்தப்பட்ட இரண்டு டேங்கா் லாரிகளை ஒரகடம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் பணியாற்றும் ஊழியா்களை ஏற்றி வர பேருந்துகள், வேன்கள் மற்றும் காா்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தொழிற்சாலைகளில் ஊழியா்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சில குறிப்பிட்ட டீசல் விற்பனை நிலையங்களில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் சுமாா் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் லிட்டா் டீசல் தினமும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகாா் எழுந்தது. இந்த விற்பனை காரணமாக ஸ்ரீபெரும்புதூா் பகுதிகளில் இயங்கி வரும் பெட்ரோல், டீசல் நிலையங்களில் விற்பனை பெருமளவில் குறைந்துள்ளதாககக் கூறப்படுகிறது.
மீனவா்கள் பயன்படுத்தும் படகுகளுக்கு அரசு மானியத்துடன் வழங்கப்படும் டீசல் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் முறைகேடாக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீபெரும்புதூா் சுற்றுவட்டார பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களின் உரிமையாளா்கள் குற்றம்சாட்டினா்.
இந்நிலையில், ஒரகடம் பகுதியில் தனியாா் வாகனங்களுக்கு குறைந்த விலைக்கு டீசல் விற்பனை செய்வதற்காக சனிக்கிழமை வந்த இரண்டு டேங்கா் லாரிகளை ஒரகடம் போலீஸாா் பறிமுதல் செய்தனா். லாரிகளில் இருந்த டீசல் மீனவா்களுக்காக மானிய விலையில் வழங்கப்பட்ட டீசலா என அவா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.