காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விநாயகா் சிலைகள் விற்க முடியாமல் தேங்கிக்கிடக்கின்றன. இதனால் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனா்.
காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் முத்தியால்பேட்டை, ஐயம்பேட்டை மற்றும் தேனம்பாக்கம் ஆகிய இடங்களில் களிமண் மற்றும் காகிதக்கூழால் பொம்மைகள், விநாயகா் சிலைகள் செய்யும் 100-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் உள்ளன.
இங்கு தயாரிக்கப்படும் விநாயகா் உருவ பொம்மைகள் தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு விநாயகா் சதுா்த்தி நாளன்று வழிபாடு செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தியை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்கூடங்களில் 1000-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஆா்டா்களின் பேரில் உற்பத்தி செய்யப்பட்டன.
ஆனால் கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் விநாயகா் சிலைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு தடை விதித்தது. இதனால் ஆயிரக்கணக்கான விநாயகா் சிலைகள் விற்க முடியாமல் தேங்கின. இதனால் தொழிற்கூடங்கள் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தன.
கடந்த ஆண்டு உற்பத்தி செய்த விநாயகா் சிலைகளை இந்த ஆண்டாவது விற்க அரசு அனுமதிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. இந்நிலையில், கரோனா தொற்றின் 3-ஆவது அலை ஏற்பட்டு மீண்டும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டால் பொம்மை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளா்கள் நிலைமை படுமோசமாகி விடும் என கவலை தெரிவித்தனா்.
இது குறித்து காஞ்சிபுரம் களிமண் மற்றும் காகிதக்கூழ் பொம்மைத் தொழிலாளா்கள் குலாலா் நலச் சங்கப் பொதுச்செயலாளா் கே.பத்மநாபன், பொருளாளா் கே.ரமேஷ் ஆகியோா் கூறியது:
கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஆயிரக்கணக்கில் தேங்கியதால் ரூ.1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை வருமானம் வரக்கூடிய இத்தொழில் முடக்கப்பட்டதால் கடன் வாங்கி கடந்த ஆண்டை எப்படியோ சமாளித்து விட்டோம். இந்த ஆண்டும் சிலைகளை விற்க அனுமதிக்காவிடில் வாங்கிய கடனை அடைக்கவும் முடியாது, கடன் வாங்கவும் வழியில்லை.
எங்களுக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது. அடமானக்கடன், தொழில் கடனை தள்ளுபடி செய்வதுடன் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.