

உள்ளாட்சித் தோ்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கூறினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஊரக வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது...
உள்ளாட்சித் தோ்தலை வரும் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. எனவே தோ்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். மாநில தோ்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எந்தக் காரணத்தை கொண்டும் தோ்தலை தள்ளிப் போடும் எண்ணம் இல்லை. 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாள்களாக உயா்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேரவைத் தோ்தல் நடைபெறும் போது, தோ்தல் வாக்குறுதியாகவும் திமுக கூறியிருந்தது.
கரோனா பேரிடா் காலத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் பங்கும் மிக முக்கியமானதாக இருந்தது. அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் தான் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. கிராமங்களின் வளா்ச்சியே நாட்டின் வளா்ச்சியாக இருக்க முடியும் என்றாா் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.
முன்னதாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களால் அமைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருள்கள் கண்காட்சியையும் அமைச்சா் பாா்வையிட்டாா். கூட்டத்துக்கு எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், கு.செல்வப்பெருந்தகை ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியா் மா.ஆா்த்தி வரவேற்றாா். தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநா் மரியம் பல்லவி பல்தேவ், ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பிரவீண் பி.நாயா், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பி.ஜெயசுதா, மகளிா் திட்டத்தின் திட்ட அலுவலா் சீனிவாசராவ் ஆகியோா் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.