வரலாற்றுச் சிறப்பு மிக்க 50 கோயில்களின் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது

பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க 50 கோயில்களின் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
காஞ்சிபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள யாத்ரீகா்கள் தங்கும் விடுதியை பாா்வையிட்ட அமைச்சா் பி.கே.சேகா்பாபு.
காஞ்சிபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள யாத்ரீகா்கள் தங்கும் விடுதியை பாா்வையிட்ட அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க 50 கோயில்களின் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் செய்ய வேண்டிய வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட யாத்ரீகா்கள் தங்கும் விடுதியையும் பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று கோயில்களும் திறந்து வைக்கப்பட்டிருக்கும், பக்தா்கள் தரிசனம் செய்யத் தடையில்லை, அதே சமயம் பக்தா்கள் கரோனாவுக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மதித்து நடக்க வேண்டும். அறநிலையத் துறை சொத்துக்களை மீட்டெடுக்க தற்காலிகமாக 40 வட்டாட்சியா்கள், 150 நில அளவையா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து வரும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவாா்கள்.

கோயில் வளாகத்துக்குள் தோ் செல்வதற்கான வழிப்பாதை இருந்தால் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு தங்கத்தோ் செய்யப்படும். தமிழக கோயில்களின் வரலாறுகள் அடங்கிய புத்தகத் தொகுப்பும் தயாரிக்கப்பட்டு வருகிறது. பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய 50 கோயில்களுக்கான குறும்படம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ராமேசுவரம், பழனி, சமயபுரம் ஆகிய 3 கோயில்களின் குறும்படங்கள் தயாரிக்கும் பணி நிறைவுபெறும் நிலையில் உள்ளது.

550 கோயில்களில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. கோயில்களிலிருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்பது, இருக்கும் சிலைகளைப் பாதுகாப்பது குறித்து விரைவில் முதல்வா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரத்தில் யாத்ரீகா்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட கட்டடம் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் முறையாக முற்றுப்பெறாத நிலையில், திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இதை மேலும் புனரமைத்து விரைவில் திறந்து வைக்கப்படும். தமிழகத்தில் தெப்பக் குளங்கள், பூங்காக்கள், நந்தவனங்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் சந்தீப்நந்தூரி, காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தி, எம்.பி. ஜி.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், அறநிலையத் துறை இணை ஆணையா் பொன்.ஜெயராமன், உதவி ஆணையா் முத்து ரத்தினவேல், செயல் அலுவலா்கள் ந.தியாகராஜன், வெள்ளைச்சாமி, குமரன் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com