காஞ்சிபுரத்தில் அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம்
By DIN | Published On : 21st February 2021 07:42 AM | Last Updated : 21st February 2021 07:42 AM | அ+அ அ- |

முகாமில் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்ட நகராட்சி ஆணையா் மகேஸ்வரி.
காஞ்சிபுரம் நகராட்சியில் அங்கீகாரம் பெறாத வீட்டுமனைப் பிரிவுகள் மற்றும் வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் கடந்த வெள்ளிக்கிழமை அங்காளபரமேஸ்வரி நகரில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த வரும் 28-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் பெருநகராட்சியுடன் இணைக்கப்பட்ட செவிலிமேடு, நத்தப்பேட்டை, ஓரிக்கை, தேனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பல குடியிருப்புகளுக்கு உரிய அங்கீகாரம் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, காஞ்சிபுரம் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில், அங்கீகாரம் பெறாத வீட்டுமனைப் பிரிவுகள் மற்றும் வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீட்டுமனைகள் வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம் அங்காளபரமேஸ்வரி நகா் மற்றும் குபேரன் நகா் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையா் மகேஸ்வரி கலந்துகொண்டு, வீட்டுமனைப் பிரிவுகள் வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டாா். இதில், நகராட்சி நகரமைப்பு பிரிவினா் கலந்துகொண்டு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், வரி செலுத்துவது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...