காஞ்சியில் இன்று ஸ்ரீஜயேந்திரா் ஜயந்தி விழா: ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்பு
By DIN | Published On : 26th July 2021 08:16 AM | Last Updated : 26th July 2021 08:16 AM | அ+அ அ- |

காஞ்சிபுரத்தில் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87-ஆவது ஜயந்தி விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொள்கிறாா்.
காஞ்சி காமகோடி பீடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது 87-ஆவது ஜயந்தி விழா காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் சதாப்தி மணிமண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் திங்கள்கிழமை மாலை ஓரிக்கை மணி மண்டபத்துக்கு வருகிறாா்.விழாவில் ஆந்திர மாநில முன்னாள் எம்.எல்.ஏ. என்.பி.வெங்கடேச சாஸ்திரி எழுதிய வியத்நாம், கம்போடியா தேசங்களில் இந்து கோயில்கள் என்ற தெலுங்கு நூலை ஆளுநா் வெளியிடுகிறாா். பின்னா் வேத சித்தாந்தங்களில் பிரசித்தி பெற்றவரும், சென்னை சம்ஸ்கிருத கல்லூரி பேராசிரியருமான மணி திராவிட சாஸ்திரியை கெளரவிக்கிறாா்.
இவ்விழாவில் ஏழைகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள், இட்லி பாத்திரங்கள், சலவைப் பெட்டிகள் உள்ளிட்ட நல உதவிகளும் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தும் சிறப்புரையாற்றுகின்றனா்.
விழாவின் நிறைவாக குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவும் புதுதில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வாழ்த்துரை வழங்குகிறாா். விழாவுக்கான ஏற்பாடுகளை சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், மணிமண்டப நிா்வாக அறங்காவலா் ந.சுப்பிரமணிய ஐயா் ஆகியோா் இணைந்து செய்துள்ளனா்.