நாட்டு வெடிகுண்டு வீசி ஆட்டோ ஓட்டுநா் கொலை
By DIN | Published On : 26th July 2021 08:12 AM | Last Updated : 26th July 2021 08:12 AM | அ+அ அ- |

காஞ்சிபுரத்தில் ஆட்டோ ஓட்டுநரின் வீட்டில் நுழைந்த மா்ம நபா்கள் அவா் மீது வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனா். மேலும், அவரது குடும்பத்தினரைத் தாக்கியதில் 3 போ் காயமடைந்தனா்.
காஞ்சிபுரம் நகா் பல்லவமேடு பகுதியில் வசித்தவா் ஆட்டோ ஓட்டுநா் செந்தில் (42). இவா் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது ஒரு கும்பல் வீட்டின் பின்புறமாக குதித்து நாட்டு வெடிகுண்டை வீசியது. பின்னா், வீட்டுக்குள் புகுந்து செந்திலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இதைத் தடுக்க முயன்ற வீட்டிலிருந்த செந்திலின் மனைவி சசிகலா (38), தங்கை கோடீஸ்வரி (40) மற்றும் வீட்டிலிருந்த விக்னேஸ்வரன் (23) ஆகிய 3 பேரையும் அரிவாளால் தாக்கி விட்டு அந்தக் கும்பல் தப்பியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் விசாரணை நடத்தினாா். செந்திலின் சடலத்தை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். காயமடைந்த மற்ற 3 பேரும் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனா். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் தொடா்பாக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்குப் பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.