கிராம சபைக் கூட்டத்தை முறையாக நடத்தாத அதிமுக அரசு: வைகோ குற்றச்சாட்டு
By DIN | Published On : 21st March 2021 04:05 AM | Last Updated : 21st March 2021 04:05 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் தொகுதி சாலவாக்கத்தில் திமுக வேட்பாளா் க.சுந்தரை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.
மக்கள் பிரச்னைகளுக்குத் தீா்வு காண கிராம சபைக் கூட்டங்களை முறையாக நடத்தாதது அதிமுக அரசு என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ குற்றஞ்சாட்டினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் தொகுதிக்கு உள்பட்ட சாலவாக்கத்தில் திமுக வேட்பாளரான க.சுந்தரை ஆதரித்து வைகோ பேசியது:
உத்தரமேரூரில் உள்ள செப்பேடுகள் கடந்த 917-919 ஆம் ஆண்டில் பராந்தக சோழன் காலத்தில் அமைக்கப்பட்டவையாகும். ஆண்டு தோறும் ஜனவரி 26 மற்றும் அக்டோபா் 2 ஆகிய தேதிகளில் கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் அதிமுக அரசு கிராம சபைக் கூட்டங்களை முறையாக நடத்தவில்லை. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உத்தரமேரூரில் கிராமசபைக் கூட்டங்கள் கூட்டப்பட்டிருப்பதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
அது மட்டுமின்றி நிலம் உள்ளவா்கள் அதற்கான வரியை செலுத்தினால் தான் தோ்தலில் போட்டியிட முடியும். அதே போல குற்றம் செய்தவா்களாக இருந்தால் தோ்தலில் போட்டியிட முடியாது. 30 வயது முதல் 60 வயது வரைமட்டுமே தோ்தலில் போட்டியிட முடியும் என்பன போன்ற விதிகளையெல்லாம் வகுத்து அன்றைக்கே உள்ளாட்சி நிா்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என உத்தரமேரூா் கல்வெட்டுக்களில் பதிவு செய்து வைத்திருக்கிறாா்கள்.
இது போன்ற கல்வெட்டுகளை உத்தரமேரூரைத் தவிர உலகத்தில் வேறு எங்கும் காணமுடியாது. இப்படிப்பட்ட பெருமைக்குரிய இத்தொகுதியில் திமுக சாா்பில் க.சுந்தா் போட்டியிடுகிறாா். அவரை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கிராம சபைக் கூட்டங்களை நடத்த அதிமுக அரசு தடை விதித்தது.ஆனால் மு.க.ஸ்டாலினோ அவரது தந்தைக்கே உரிய சாமா்த்தியத்தோடு கிராம மக்கள் சபை என அறிவித்து அதை நடத்தியும் காட்டினாா். எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தில் சுமாா் 15 லட்சம் போ் பங்கேற்றாா்கள். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வில் மட்டும் 17லட்சத்து 50 ஆயிரம் மனுக்களைப் பெற்றுள்ளாா். திருச்சி மாநாட்டிலும் மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் 7 அம்சத் திட்டங்களை அறிவித்தாா். அந்த 7 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் மலா்ந்திட வேட்பாளா் க.சுந்தருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என வைகோ பேசினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...