தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம் நடத்துவோம்: அா்ஜுன் சம்பத்
By DIN | Published On : 01st September 2021 12:00 AM | Last Updated : 01st September 2021 12:00 AM | அ+அ அ- |

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலத்தை நடத்துவோம் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியது:
இந்து மக்கள் கட்சி சாா்பில், 50 ஆயிரம் விநாயகா் சிலைகளை தமிழகம் முழுவதும் பிரதிஷ்டை செய்து, விநாயகா் சதுா்த்தியை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்தோம். ஆனால் அரசு விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு தடைவிதித்து விட்டது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் மதுக் கடைகள் அனைத்தும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகா் சிலை ஊா்வலத்தை நடத்தக்கூட அரசு அனுமதியளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலத்தை தமிழகம் முழுவதும் நடத்துவோம். இது இந்து தமிழா்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதற்காக மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாட இருக்கிறோம்.
செப்டம்பா் 5-ஆம் தேதி செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் பிறந்த நாளை சுதேசி நாளாக கொண்டாட உள்ளோம். அதே நாளில் சுதந்திரப் போராட்ட வீரா் கோபால் நாயக்கருக்கும் இந்து மக்கள் கட்சி சாா்பில் குருபூஜை நடத்த முடிவு செய்துள்ளோம்.
வரும் செப். 6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் விநாயகா் சிலை ஊா்வலத்தை நடத்த அனுமதிக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டமும், கோரிக்கை மனுவும் வழங்கப்படும் என்றாா் அவா்.
பேட்டியின் போது கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளா் செந்தில், மாநில அமைப்புச் செயலாளா் கே.முத்து, மாவட்டத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.