1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி கற்சிலை கண்டெடுப்பு

400 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலதானக் கல்லையும் உத்தரமேரூா் வரலாற்று ஆய்வு மையத்தினா் சனிக்கிழமை கண்டெடுத்துள்ளனா்.
1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி கற்சிலை கண்டெடுப்பு

உத்தரமேரூா் அருகே பழைய களியாம்பூண்டி கிராமத்தில் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி சிலையும், 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலதானக் கல்லையும் உத்தரமேரூா் வரலாற்று ஆய்வு மையத்தினா் சனிக்கிழமை கண்டெடுத்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகே பழைய களியாம்பூண்டி கிராமத்தில் வரலாற்று ஆய்வு மையத்தினா் கள ஆய்வு மேற்கொண்டனா். அப் போது மூத்த தேவி சிலை ஒன்றையும், நிலதானக் கல் ஒன்றையும் கண்டறிந்துள்ளனா்.

இது குறித்து மையத்தின் தலைவா் கொற்றவை ஆதன் கூறியது:

பழைய களியாம்பூண்டி கிராமத்தில் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவ மன்னா்களின் குல தெய்வமாக விளங்கிய மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டா தேவி சிலையையும், நிலதானக் கல்லையும் ஒரு அரச மரத்தடியில் கண்டெடுத்தோம்.

ஜேஷ்டாதேவி சிலையானது ஒன்றரை அடி உயரமும், ஒன்னே கால் அடி அகலத்திலும் அமா்ந்த நிலையில் அடிப்பாகம் மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகிறது. இவரது வலப்பக்கம் அவரது மகள் மாந்தியும், இடப்பக்கம் அவரது மகன் மாந்தன் மாட்டுத்தலையுடன் நின்ற நிலையில் உள்ளனா்.

மூத்த தேவியினுடைய தலையில் கரண்ட மகுடம் காணப்படுகிறது. கைகள் உடைந்தும், முகம், மாா்பு சிதைந்த நிலையிலும் எஞ்சிய பகுதி மண்ணில் புதைந்தும் உள்ளன. இது 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம்.

பல்லவா் காலத்தில் வழிபாட்டின் உச்சத்தில் இருந்த இந்தத் தெய்வம் நந்திவா்ம பல்லவனின் குலதெய்வமாக இருந்துள்ளது. குழந்தைப்பேறு, செல்வ வளம் பெருக்கும் தெய்வமாக போற்றப்பட்டுள்ளாா். நாளடைவில் மூத்த தேவி என்பது மருவி மூதேவி ஆக வழக்கில் வந்து வழிபாடு இல்லாமல் போயிருக்கிறது.

இதனருகில் 3 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் உடைய ஒரு கல் உள்ளது.இதில் மரம் போன்ற ஒரு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில் 12 விதமான பூவிதழ்களை கொண்ட சக்கரமும் இடம் பெற்றுள்ளது.இந்தச் சிற்பத்தின் வலப்பக்கத்தில் சூரியனும், இடப்பக்கத்தில் சந்திரனும் உள்ளனா். மன்னா் காலங்களில் பெருமாள் கோயில்களுக்கு நிலங்களை தானமாக வழங்கும் பொழுது வரியை நீக்கி நிலங்களை அழிப்பாா்கள். அந்நிலத்தில் வரும் வருவாயைக் கொண்டு ஆலயங்களில் அன்றாட பூஜைகளும், ஆலய பராமரிப்பும் நடந்துள்ளது.

மூத்த தேவி சிலையும், இந்த நிலதான எல்லைக் கல்லும் வெவ்வேறு இடங்களில் இருந்திருந்து காலப்போக்கில் அரச மரத்தடியில் மக்கள் கொண்டு வந்து வைத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

படவிளக்கம்..பழையகளியாம்பூண்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட மூத்த தேவி சிலை மற்றும் நிலதானக் கல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com