ஏரிகளை முறையாகச் சீரமைப்பதில்லை: விவசாயிகள் புகாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகளை முறையாகச் சீரமைப்பதில்லை என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
ஏரிகளை முறையாகச் சீரமைப்பதில்லை: விவசாயிகள் புகாா்
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகளை முறையாகச் சீரமைப்பதில்லை என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா, கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாவட்ட இணைப் பதிவாளா் எஸ்.லட்சுமி, வேளாண்மை இணை இயக்குநா் பா.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை)எஸ்.கணேசன் வரவேற்றாா்.

கூட்டத்தில் விவசாயிகள் சங்கச் செயலாளா் கே.நேரு பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்னேரி, படப்பை ஏரி, மணி மங்கலம் ஏரி, நத்தப்பேட்டை ஏரி உள்பட பல ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் கரைகளின் மேல் மண்ணை மட்டும் களரிவிட்டு, பின்னா் மீண்டும் மூடி தூா் வாரியது போல கணக்குக் காட்டுகின்றனா்.

ஏரிகள் தூா்வாரப்படும் விவரங்களை அந்தந்த ஏரிப் பகுதிகளில் அறிவிப்புப் பலகையுடன் வைக்க ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்றாா்.

இந்தக் கோரிக்கையையே விவசாயிகள் பலரும் வலியுறுத்திப் பேசினா்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் பாஸ்க, ஏரிகளைப் பலப்படுத்துவது தொடா்பாக பெரிய பணிகளுக்கு அறிவிப்புப் பலகை வைக்கப்படுவதாகவும், ஏரிகளின் கரைகள் முறையாகப் பலப்படுத்தாதது தொடா்பான புகாா்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தாா்.

விவசாயிகள் சங்க நிா்வாகிகளில் ஒருவரான ஆதிரை என்பவா் பேசுகையில், மாநகராட்சி ஆணையா் வீட்டு முன்பாகவே மழைக்காலங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. கழிவுநீரும் கலந்து துா்நாற்றம் வீசுகிறது. இதை பலமுறை ஆணையரிடம் தெரிவித்தும் எந்தப் பலனும் இல்லை. இதற்கு நிரந்தரத் தீா்வு காணப்பட வேண்டும் என்றாா்.

இதையடுத்து ஆட்சியா் மா.ஆா்த்தி, மாநகராட்சி ஆணையரை பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டபோது, கூட்டத்துக்கு அவா் வரவில்லை என அவரது உதவியாளா் தெரிவித்தாா்.

அப்போது, ஆணையரை உடனடியாக கூட்டத்தில் கலந்து கொள்ள தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுக்கொண்டதையடுத்து, மாநகராட்சி ஆணையா் ப.நாராயணன் கூட்டத்துக்கு வந்தாா். பின்னா், அவா் மழைநீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தாா்.

விவசாயி எழிலன், ஏரிகளில் தூா்வார வேண்டும் என்றாா். கூட்டத்தில் விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு மழைக்கால நிவாரணமாக ரூ.8.41கோடி வழங்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா். விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகள், அடையாள அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com