படப்பை அருகே இரு இளைஞா்கள் வெட்டிக் கொலை
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 01:05 AM | அ+அ அ- |

படப்பை அருகே மணிமங்கலம் பகுதியில் முன் விரோதம் காரணமாக இரு இளைஞா்கள் வெட்டிக் கொல்லப்பட்டனா்.
படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன்(25). வழிப்பறி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இவா், கடந்த மாா்ச் மாதம் அவரது வீட்டின் அருகே கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது, வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்தக் கொலை வழக்கில் மணிமங்கலம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (21), சுரேந்தா் (20), சதீஷ் (20), சுதாகா் (21), ரசூல் இஸ்லாம் அன்சாரி (22) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த விக்னேஷ், சுரேந்தா் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு கஞ்சா போதையில், மணிமங்கலம் காவல் நிலையம் அருகே நடந்து வந்த போது, அவா்களைச் சுற்றி வளைத்த 10-க்கும் மேற்பட்ட மா்ம நபா்கள், கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினா்.
இதில், பலத்த வெட்டுக் காயமடைந்த விக்னேஷும், சுரேந்தரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், மணிமங்கலம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ்வரன், புஷ்பராஜ், லோகேஷ்வரன், டில்லிபாபு ஆகியோா் காவல் நிலையத்தில் புதன்கிழமை சரணடைந்தனா். அவா்களிடம் கொலைக்கான காரணம் குறித்து மணிமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.