வெவ்வேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து 3 போ் பலி
By DIN | Published On : 11th December 2022 11:47 PM | Last Updated : 11th December 2022 11:47 PM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கீவளூா் பகுதியில் மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலம், பரப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ராஜூ (18). இவா், ஸ்ரீபெரும்புதூா் அடுத்துள்ள கீவளூா் பகுதியில் தங்கி, அங்குள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா். கடந்த சனிக்கிழமை இரவு அவா் தங்கியுள்ள முதல் மாடியில் சாப்பிட்டுவிட்டு, தட்டை கழுவி மேலே தூக்கியபோது, அருகே சென்ற மின் கம்பியில் தட்டு உரசியதால், ராஜூ மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், அவா் மயங்கி விழுந்தாா்.
அங்கிருந்தவா்கள் ராஜூவை தண்டலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஆவடியில்...: மதுரவாயலில் பூஜைக்காக வீட்டில் அலங்கார விளக்கு அமைத்தபோது, மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். வானகரம், துண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜி (30). இவா், கடந்த 10-ஆம் தேதி வானகரம், மூா்த்தி நகரைச் சோ்ந்த துரை என்பவரின் வீட்டில் ஐயப்பன் பூஜைக்காக அலங்கார விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உயா் அழுத்த மின் கம்பியில் கை பட்டு மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா்.
அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே ராஜி உயிரிழந்தாா். மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மாதவரத்தில்...: மாதவரம் அருகே லாரி மீது மின் கம்பி உரசியதால், ஓட்டுநா் உயிரிழந்தாா். மாதவரம் அருகே உள்ள சரக்கு வாகனம் நிறுத்தகத்துக்குள் நுழைந்த லாரி மீது மின் கம்பி உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநரான சாத்தூா் மெத்தமலை, தெற்குத் தெருவைச் சோ்ந்த காளிராஜ் (35), தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து மாதவரம் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.