தொடர் கனமழை: அத்திவரதர் உள்ள அனந்தசரஸ் திருக்குளம் முழுவதும் நிரம்பி ரம்மியமாக கட்சியளிப்பு
By DIN | Published On : 12th December 2022 12:35 PM | Last Updated : 12th December 2022 12:35 PM | அ+அ அ- |

தொடர் கனமழை எதிரொலியாக உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவிலில் அத்திவரதர் உள்ள அனந்தசரஸ் திருக்குளம் முழுவதும் நிரம்பி ரம்மியமாக கட்சியளிக்கிறது.
காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் புகழ் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவத்தை யொட்டி கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியன்று கோவிலிலுள்ள அனந்த சரஸ் திருக்குளத்திலுள்ள நீராழி மண்டபத்தில் இருந்து ஆதி அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டு பொது மக்களின் தரிசனத்திற்காக சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் என 48 நாட்கள் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டது.
அதையொட்டி சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை நேரில் தரிசித்து சென்றனர்.
பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதியன்று அத்தி வரதர் வைபவம் நிறைவு பெற்றதை அடுத்து மீண்டும் அனந்த சரஸ் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் ஆதி அத்தி வரதர் வைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது வடக் கிழக்கு பருவ மழையை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் எதிரொலியாக காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவிலில் தற்போது அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் திருக்குளமானது மழை நீரால் முழுவதுமாக நிரம்பி மிக ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
இதையும் படிக்க- செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு 2,000 கனஅடியாக உயர்வு
குறிப்பாக அத்தி வரதர் உள்ள நீராழி மண்டபத்தின் கோபுரத்தின் பாதியளவு மழை நீரில் மூழ்கி திருக்குளத்தின் ஐந்து படிகள் மட்டுமே வெளியே தெரிகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2015-ல் பெய்த வடக் கிழக்கு பருவ மழைக்கு பிறகு கடந்த 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2021ஆம் ஆண்டு அனந்த சரஸ் குளமானது மழை நீரால் முழுவதுமாக நிரம்பிய நிலையில் தற்போது தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டாக இவ்வாண்டும் அனந்த சரஸ் குளமானது மழை நீரால் முழுவதுமாக நிரம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.