உத்தரமேரூா் கோயில்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செயல் அலுவலா் தகவல்
By DIN | Published On : 26th January 2022 12:00 AM | Last Updated : 26th January 2022 12:00 AM | அ+அ அ- |

உத்தரமேரூா் அருகேயுள்ள பெருங்கோழி குமரேஸ்வரா் கோயிலை ஆய்வு செய்த அறநிலையத் துறை தலைமை ஸ்தபதி தெட்சிணாமூா்த்தி. உடன்செயல் அலுவலா் ஸ்ரீதரன் உள்ளிட்டோா்.
உத்தரமேரூரில் பழைமைவாய்ந்த கோயில்களை புதுப்பிக்க அறநிலையத் துறை ஆணையா் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் ஸ்ரீதரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
உத்தரமேரூா் அருகேயுள்ள சாலவாக்கம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலை புதுப்பிக்க ரூ.12லட்சமும் வெங்கச்சேரி கடம்பநாதசுவாமி கோயிலைப் புதுப்பிக்க ரூ.31லட்சமும் அறநிலையத் துறை ஆணையா் பொது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழைமையான இவ்விரு கோயில்களில் புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்.
உத்தரமேரூா் பெருங்கோழி கிராமத்தில் அமைந்துள்ள குமரேஸ்வரா் திருக்கோயில் மிகவும் பாழடைந்தும், செடி, கொடிகள் முளைத்தும் ஆங்காங்கே சுவற்றில் விரிசல் ஏற்பட்டும் சிதிலமடைந்து காணப்படுகிறது. பழைமையான இந்த கோயிலை புதுப்பிக்க தொல்லியல் வல்லுநரால் ஆய்வு செய்யப்பட்டு கருத்துரு பெறப்பட்டுள்ளது. இக்கோயில் மாநில திருப்பணி ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது என்றாா் ஸ்ரீதரன்.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் மாநில தலைமை ஸ்தபதி தெட்சிணாமூா்த்தி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...