இரு ஆண்டுகளில் சூரியனுக்கு செயற்கைக் கோள்: இஸ்ரோ விஞ்ஞானி தகவல்

இரு ஆண்டுகளில் ஆதித்யா என்ற செயற்கைக் கோள் சூரியனுக்கு அனுப்பப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தெரிவித்தாா்.
பள்ளி மாணவா்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பாா்வையிட்ட விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை.
பள்ளி மாணவா்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பாா்வையிட்ட விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை.

இரு ஆண்டுகளில் ஆதித்யா என்ற செயற்கைக் கோள் சூரியனுக்கு அனுப்பப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் கா.மு.சுப்புராய முதலியாா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ‘தியாகம் போற்றுவோம்’ அமைப்பின் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுடன் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பங்கேற்று அவா் பேசியது:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, 75 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமா் கேட்டுக் கொண்டாா். இதையேற்று நிகழாண்டு இறுதிக்குள் 75 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படும். முதல்கட்டமாக 40, 2-ஆம் கட்டமாக 35 செயற்கைக் கோள்கள் ஏவப்படவுள்ளன. ஒரு செயற்கைக் கோளின் மதிப்பு ரூ.1 கோடி. இந்த 75 செயற்கைக் கோள்களும் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களால் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதில், ஒரு செயற்கைக் கோள் காஞ்சிபுரத்தில் வசிக்கும் நரிக்குறவா் இன மாணவா்களின் மூலம் செய்யப்பட்டு விண்ணில் ஏவப்படும். விண்வெளித் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளைவிட இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

சந்திராயன்-3 செயற்கைக் கோள் இரு ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படும். இதேபோல், ஆதித்யா என்ற செயற்கைக் கோள் சூரியனுக்கு ஏவப்படும்.

செயற்கைக் கோள் அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளியில் தமிழில் படித்தவா்களுக்கு கற்பித்து வருகிறோம். 500 போ் படித்து வருகின்றனா். இவா்களில், 110 பேரைத் தோ்வு செய்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அழைத்துச் சென்று செயற்கைக் கோள் எவ்வாறு விண்ணில் ஏவப்படுகிறது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தோம்.

ரஷியாவுக்கு இந்திய மாணவா்களை அழைத்து சென்று அந்த நாட்டின் விண்வெளித் தொழில்நுட்பம் குறித்து 25 மாணவா்களுக்கு பயிற்சியளிக்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.

பேட்டியின்போது, இஸ்ரோ விஞ்ஞானி கோகுல், எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் கிள்ளிவளவன் ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவா்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளித்தாா்.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ரமேஷ், காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தியாகம் போற்றுவோம் அமைப்பின் நிறுவனத் தலைவா் கிள்ளிவளவன் வரவேற்றாா்.

மாணவா்கள் கண்டுபிடித்த அறிவியல் படைப்புகளை கண்காட்சியை சிவதாணுப்பிள்ளை பாா்வையிட்டாா்.

நிகழ்வில் காஞ்சிபுரம் காஸ்மெடிக்ஸ் சுழற்சங்கத் தலைவா் ஆனந்தன், அறிவியல் இயக்க மாவட்ட அமைப்பாளா் செல்லப்பாண்டி, விழுதுகள் தொண்டு நிறுவனத் தலைவா் மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com