காஞ்சிபுரம்: ஒரு லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் அளவிடும் பணிகள் மூன்று மாதத்தில் நிறைவடையும்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள திருப்புலிவனத்தில் அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் நிலம் அளவிடும் பணியை புதன்கிழமை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம்: ஒரு லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் அளவிடும் பணிகள் மூன்று மாதத்தில் நிறைவடையும்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள திருப்புலிவனத்தில் அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் நிலம் அளவிடும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு  கூறியதாவது.  

கோயில் நிலங்கள் ஏற்கனவே 50 ஆயிரம் ஏக்கர் நிலம் அளவிடும் பணி நிறைவு பெற்றுள்ளது. தற்போது 50 ஆயிரத்து ஒராவது ஏக்கர் நில அளவிடும் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. என்னை பொருத்தவரை இது ஒரு ஆன்மீக புரட்சி என்றே சொல்ல வேண்டும். இன்னும் மூன்று மாதங்களில் ஒரு லட்சம் ஏக்கருக்கான கோயில் நிலங்கள் அளவிடும் பணி நிறைவு பெற உள்ளது. 

இதற்கென 150 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் 50 குழுக்களாகப் பிரிந்து நில அளவிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அறுபத்தி ஆறு குழுக்களாக அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இதனை 100 குழுக்களாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இறைவன் சொத்து இறைவனுக்கே சொந்தம் என்ற அடிப்படையில் கோயில் நிலங்கள் அனைத்தும் நில அளவீடு செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. 

நில அளவிடும் பணி ரேவர் கருவி மூலம் அளக்கப்பட்டு அந்தந்த மண்டல அலுவலகங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2496 ஏக்கர் நில அளவிடும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. கோயில் இடங்களில் வாடகைக்கு இருப்பவர்களுக்கு வாடகையை உயர்த்துவது சம்பந்தமாக அறநிலையத்துறை ஆணையாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

பின்னர் இக்குழு முதன்மைச் செயலாளர் தலைமையில் கூடி கூட்டம் நடத்தி ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்றிரண்டு மாதங்களில் வாடகைதாரர்கள் மகிழ்ச்சிப் படும்படியான அறிவிப்பு வரும். இதை தமிழக முதல்வர் விரைவில் அறிவிக்க உள்ளார்கள். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 11 கோடி மதிப்பிலான திருப்பணி தொடங்கப்படவுள்ளது. பேட்டரி கார் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

திருக்கோயில் சொத்துக்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 4.52 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு அளவைக்கல் பதிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோயில் 9.27 ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் 100 கோடியில் புனரமைக்கப்பட்டு வருகிறது. 

அறநிலையத்துறை நிதி இல்லாமல் அரசு துறை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். திருக்குளங்கள் மற்றும் திருத்தேர்கள் செப்பனிட 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேலும் 5 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருக்குளங்களுக்கு நீர்வரத்தை தடுக்கும் ஆக்கிரமிப்புகளை படிப்படியாக அகற்றி வருகிறோம். புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் 90 லட்சம் செலவில் நீர்வரத்துக்கான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பிகே சேகர்பாபு தெரிவித்தார். 

அவரது பேட்டியின் போது தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.பி.க.செல்வம், அறநிலையத்துறை ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, எம்.எல்.ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் ருத்ரய்யா ஆகியோரும் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com