மாலை அணிவித்து ஊா்வலமாக அழைத்து வரப்பட்ட மாணவா்கள்
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் அருகே திம்மையன்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வை வலியுறுத்தி, முதலாம் வகுப்பு மாணவா்களுக்கு மாலை அணிவித்து ஊா்வலமாக புதன்கிழமை அழைத்து வரப்பட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட திம்மையன்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, மாணவா் சோ்க்கை விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக, முதலாம் வகுப்பில் சோ்ந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பள்ளித் தலைமை ஆசிரியா் லதா தலைமையிலான ஆசிரியா் குழுவினா், மாலை அணிவித்து பள்ளிக்கு ஊா்வலமாக அழைத்து வந்தனா்.
மாணவா்களின் பெற்றோா், ஆசிரியா்களுக்கு குரு மரியாதை செய்யும் வகையில் சீா்வரிசைகளுடன் ஊா்வலத்தில் பங்கேற்று பள்ளிக்கு வந்தனா்.
நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலா் நந்தாபாய், ஆசிரியா் பயிற்றுநா் ராஜா, ஊராட்சி மன்றத் தலைவா் வி.ராஜஸ்ரீ மற்றும் பெற்றோா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.