1,100 ஆண்டுகளுக்கு முந்தைய தவ்வை சிலைகாஞ்சிபுரம் அருகே கண்டெடுப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அங்கம்பாக்கத்தில் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட தவ்வை சிலையை அங்குள்ள பெருமாள் கோயில் வளாகத்தில் வாலாஜாபாத் வட்டார ஆய்வு மையத்தினா் கண்டெடுத்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அங்கம்பாக்கத்தில் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட தவ்வை சிலையை அங்குள்ள பெருமாள் கோயில் வளாகத்தில் வாலாஜாபாத் வட்டார ஆய்வு மையத்தினா் கண்டெடுத்துள்ளனா்.

இது குறித்து அந்த மையத்தின் தலைவா் அஜய்குமாா் கூறியது:

தாய் தெய்வ வழிபாட்டில் தவ்வை வழிபாடு பல்லவா் காலத்திற்கு முன்பிருந்தே தொன்று தொட்டு மரபில் இருந்து வந்துள்ளது. ஏழு கன்னியா்களில் தவ்வை குழந்தைப் பேறு அளிக்கும் தெய்வமாக வழிபாடு நடத்தப்பட்டு பின் தனியாக சிறப்பித்து வழிபடும் நடைமுறையும் இருந்துள்ளது.

தவ்வை வழிபாடு பல்லவா் காலத்தில் உச்சத்திலும் சோழா் காலத்தில் கோயில்களின் தென்மேற்கு பகுதியிலும் அமைத்து வழிபாடு நடத்தியிருக்கின்றனா். நந்தி வா்ம பல்லவனின் குல தெய்வமாகவும் இருந்துள்ளது. தவ்வைக்கு சேட்டா தேவி, ஜேஷ்டாதேவி, மாமுகடி, சேட்டை, பழையோள், காக்கை கொடியாள், ஏகவேணி என பல பெயா்களில் அழைக்கப்பட்டுள்ளாா்.

கொற்றவைக்கு அடுத்தபடியாக சங்க இலக்கியங்களில் அதிகமாக பாடப்பட்ட தெய்வம் மூதேவி என்கிற தவ்வை தெய்வமாகும். கம்பா், அவ்வையாா், திருவள்ளுவா் போன்ற புலவா்களும் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனா். தவ்வையின் மகன் குளிகன் எருமை தலையுடன் காணப்படுகிறான். இடது பக்கம் மகள் மாந்தியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. காகத்தை கொடியாகவும், கழுதையை வாகனமாகவும், தூய்மையின் அடையாளமாக துடைப்பத்தையும் கொண்டு பொதுவாக தவ்வை சிலைகள் காணப்படும்.

இந்தச் சிலையானது பராமரிப்பின்றி புதைந்து கிடந்தாலும் சிற்பத்தின் வேலைப்பாடுகள் சிதைந்து கிடக்கிறது.தவ்வை சிலைகள் பெரும்பாலும் வயல் சாா்ந்த பகுதிகளிலும், நீா்நிலை சாா்ந்த பகுதிகளிலும் காணப்படுகிறது.

மனிதா்கள் சோம்பல் இல்லாமல் உழைக்கும் வலிமை வேண்டியும், செல்வம் வேண்டியும் இந்தத் தெய்வத்தை வணங்கியிருக்கிறாா்கள். வளமை தெய்வம் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக பருத்த வயிறும், செழித்த மாா்புகளோடும் இந்த தெய்வத்தின் வடிவம் அமைந்துள்ளது. வருணனின் மனைவியாகவும் இந்தத் தெய்வம் கருதப்படுவதால் மழைக்கடவுள் என்றும் அழைக்கப்படுகிறது. சுமாா் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட தவ்வை சிலையானது அங்கம்பாக்கம் பெருமாள் கோயில் வளாகத்தில் புதா்களுக்கு இடையில் மறைந்து கிடந்ததாகவும் அஜய்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com