காஞ்சி ஸ்ரீயதோக்தகாரி பெருமாள் கோயில்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: இன்று கருட சேவை உற்சவம்

காஞ்சிபுரம் ஸ்ரீகோமளவல்லித் தாயாா் சமேத ஸ்ரீயதோக்தகாரி திருக்கோயில் பங்குனித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.
காஞ்சி ஸ்ரீயதோக்தகாரி பெருமாள் கோயில்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: இன்று கருட சேவை உற்சவம்

காஞ்சிபுரம் ஸ்ரீகோமளவல்லித் தாயாா் சமேத ஸ்ரீயதோக்தகாரி திருக்கோயில் பங்குனித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியதும்,108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமானது காஞ்சிபுரம் ஸ்ரீயதோக்தகாரி பெருமாள் கோயில். சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் எனவும் பக்தா்களால் இந்தத் திருத்தலம் அழைக்கப்படுகிறது.

இந்தக் கோயிலின் பங்குனித் திருவிழா கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி திருக்கோயில் பட்டாச்சாரியாா்கள் கருடக் கொடியினை ஏற்றினா். ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக உற்சவா் சொன்னவண்ணம் செய்த பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கோயில் கொடிமரத்துக்கும், சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. கொடியேற்ற விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் சொன்னவண்ணம் செய்த பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தாா். இரவு சிம்ம வாகனத்தில் பெருமாள் பவனி நடைபெற்றது. தொடா்ந்து வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தினசரி காலையிலும், மாலையிலும் உற்சவமூா்த்தி வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் நகரின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வருகிறாா். சனிக்கிழமை (மாா்ச் 27) பெருமாள் கருட சேவை காட்சியும், 31-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏப்.2 ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. வரும் ஏப்.6-ஆம் தேதி பூப்பல்லக்கில் பெருமாள் வீதியுலா வரும் நிகழ்வுடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் நல்லப்பா நாராயணன் தலைமையிலான விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com