

வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி வெளிவட்டச்சாலை, மாங்காடு அருகே மலையம்பாக்கத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சகோதரர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு(46). இவரது தம்பி சுரேஷ்பாபு(40). அதிமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களான இவர்கள் பொக்லைன் இயந்திரங்களை சொந்தமாக வாங்கி வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரமேஷ்பாபு, சுரேஷ்பாபு இருவரும் பொக்லைன்களை வாங்குவதற்காகவும், அதனை பரிசோதனை செய்வதற்கும் ஓட்டுநர்களான கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் (42), கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல்(25), கிருஷ்ணகிரி, நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சுதாகர்(28) ஆகியோருடன் திண்டுக்கல்லுக்குச் சென்றனர்.
அங்கு பொக்லைன் இயந்திரங்களைப் பார்த்து விட்டு திங்கள்கிழமை இரவு காரில் கும்மிடிப்பூண்டிக்கு புறப்பட்டனர். ரமேஷ்பாபு ஓட்டி வந்த கார், செவ்வாய்க்கிழமை அதிகாலை வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி வெளி வட்டச்சாலையில் மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி 10 அடி ஆழ பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. இதில், ரமேஷ்பாபு, சுரேஷ்பாபு, சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலத்த காயங்களுடன் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி, உடற்கூறு சோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயம் அடைந்த ராஜவேல், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காவல் ஆய்வாளர் சுபாஷினி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.