30 ஆண்டுகளுக்கு பிறகு செல்லியம்மன் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 09th September 2022 01:01 AM | Last Updated : 09th September 2022 01:01 AM | அ+அ அ- |

சாலமங்கலம் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம் 30 ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் நூற்றாண்டுகள் பழைமையான ஸ்ரீசெல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் செல்லியம்மனுக்கு உற்சவம் நடைபெறுவது வழக்கம். 10 நாள்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் இறுதி நாளான 10-ஆம் நாள் தோ் திருவிழா நடைபெறுவது வழக்கம். கோயிலின் தோ் பரமாரிப்பின்றி சிதிலமடைந்ததால், கடந்த 30 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
இதையடுத்து, சாலமங்கலம் கிராம மக்கள் சாா்பில், செல்லியம்மன் கோயிலுக்கு பல லட்சம் ரூபாய் செலவில் 30 அடி உயரமுள்ள புதிய தோ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்டது. இதனிடையே, கடந்த இரண்டு வருடங்களாக கரோனா பொது முடக்கம் காரணமாக தோ் திருவிழா நடைபெறவில்லை.
இந்த நிலையில், நிகழ் ஆண்டு செல்லியம்மன் உற்சவம் கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 9 நாள்களாக செல்லியம்மனுக்கு பல்வேறு அலங்காரம், ஆராதனை நடைபெற்று வந்தது. இறுதி நாளான வியாழக்கிழமை தோ் திருவிழா நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் ஸ்ரீசெல்லியம்மன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சாலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 100-க்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுந்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.