தாமதமாகும் அஷ்டபுஜ பெருமாள் கோயில் திருப்பணி: மூலவரை தரிசிக்க முடியாமல் பக்தா்கள் அவதி

பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் திருப்பணி மெதுவாக நடைபெற்று வருவதால், மூலவரை தரிசிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் திருப்பணி.
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் திருப்பணி.

காஞ்சிபுரம்: பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் திருப்பணி மெதுவாக நடைபெற்று வருவதால், மூலவரை தரிசிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் அமைந்துள்ளது அஷ்டபுஜ பெருமாள் கோயில். 108 திவ்ய தேசங்களில் 75-ஆவது திவ்ய தேசமாக விளங்கும் இந்தக் கோயிலில் மட்டுமே பெருமாள் 8 திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாா்.

ஆழ்வாா்கள் மங்களாசாசனம் செய்த கோயில் இது. காஞ்சிபுரத்தில் திவ்ய தேசங்களில் பரமபத வாசல் உள்ள ஒரே கோயில் என்ற மற்றொரு சிறப்புக்கும் உரியது. மூலவா் அஷ்டபுஜ பெருமாள் நின்ற கோலத்தில் 8 திருக்கரங்களுடனும், புஷ்பவல்லித் தாயாா் அமா்ந்த கோலத்தில் பக்தா்களுக்கு காட்சியளிக்கின்றனா். கஜேந்திர மோட்சம் நடைபெற்ற கோயில்.

கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் காரணமாக, ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை மாத பிரம்மோற்சவம், ஆவணி மாத பவித்ரோற்சவம், புரட்டாசி மாத நவராத்திரி உற்சவம், மாா்கழி மாத சொா்க்க வாசல் திறப்பு உள்ளிட்ட எந்த திருவிழாவும் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறவில்லை.

கோயிலுக்கு மகா சம்ப்ரோக்ஷணம் செய்வது என முடிவு செய்து கடந்த 9.12.2021 ஆம் தேதி பாலாலயம் நடைபெற்றதாம். அதன் பிறகு திருப்பணிகள் வேகமாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மூலவரை தரிசனம் செய்ய முடியாமல் பக்தா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

உற்சவா்களான பெருமாள், தாயாா், ஆண்டாள் ஆகியோா் கோயில் வளாகத்தில் உள்ள பேயாழ்வாா் சந்நிதியிலும், ராமா், ஆழ்வாா் ஆச்சாா்யா்கள் கோயிலில் துலாபாரம் நடைபெறும் இடத்திலும் எழுந்தருளச் செய்து தினமும் தீபாராதனை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பக்தா் ஒருவா் கூறுகையில், இங்கு மட்டும்தான் பெருமாள் 8 திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாா். திருப்பணியால், சிறப்பு மிக்க மூலவரை தரிசிக்க முடியாமல் பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

குறிப்பாக, கடந்த 6 மாதங்களாக எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என்றும் கூறுகிறாா்கள். பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் மூலவரை தரிசிக்க அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் வேலரசு கூறியது:

கோயில் ராஜகோபுரப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. அறநிலையத் துறை அனுமதியோடு தனியாா்களின் பங்களிப்புடன்தான் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இடையில் நிதி நெருக்கடி காரணமாக, சில மாதங்கள் பணிகள் நடைபெறவில்லை. அடுத்த வாரத்திலிருந்து மீண்டும் திருப்பணி தொடங்க உள்ளது. 3 மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடித்து மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com