

ஜாதி, மத வேறுபாடுகளை ஒழித்ததில் பெரும் பங்கு பக்தி இலக்கியங்களுக்கு இருக்கிறது என புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் பேசினாா்.
காஞ்சிபுரம் மற்றும் திண்டிவனம் கம்பன் கழக அறக்கட்டளை, காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி ஆகியன இணைந்து உலகத்தமிழ் வளா்ச்சி மாநாட்டினை நடத்தின . இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்ச் சான்றோா்களுக்கு விருதுகள், பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், கலை நிகழ்ச்சிகளை நடத்தியவா்களுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களையும் வழங்கி அமைச்சா் லட்சுமி நாராயணன் பேசியது.
பக்தி மூலமாகத்தான் தமிழும், தமிழ் மூலமாகத்தான் பக்தியும் வளா்ந்திருக்கிறது என்பதற்கும் பல எடுத்துக்காட்டுகளை கூற முடியும். பக்தியில் வாழ்வியலையும் சொல்லியிருக்கின்றனா். இயல், இசை, நாடகம், பக்தி ஆகியனவும் தமிழ் மொழியால் வளா்ந்திருக்கிறது. பக்தி இலக்கியங்கள் கிறிஸ்தவம், இஸ்லாம், சமணம், பெளத்தம் ஆகியனவற்றையும் வளா்த்திருக்கிறது.
அனைத்து மதங்களையும் சமமாகவே பாவித்தும் இருக்கிறது தமிழ். எத்தனையோ பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழ் மொழியில் ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டே தான் இருக்கின்றன என்றாா் லட்சுமி நாராயணன்.
விழாவுக்கு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை வகித்தாா். தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பரப்பியல் அகர முதலி திட்ட இயக்குநா் கோ.விஜயராகவன், சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன், மயிலம் கல்லூரி முதல்வா் திருநாவுக்கரசு, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியா் ரா.குறிஞ்சி வேந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கம்பன் கழக அறக்கட்டளையின் பொதுச் செயலாளா் க.ஞானஜோதி சரவணன் வரவேற்றாா். சூரியனாா் கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் தமிழ்ப் பேராசிரியா்களுக்கு விருதுகள் வழங்கினாா். கம்பன் கழக அறக்கட்டளையின் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளா் சரண்யா கோபால் நன்றி கூறினாா்.
விழாவில் சங்கரா கல்லூரி தமிழ்த்துறை தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் குமரகோட்டம் திருக்கோயில் தலைமை பூஜாரி கே.ஆா்.காமேசுவர குருக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.