பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிறுமாங்காடு ஊராட்சித் தலைவியின் கணவா் கன்னியப்பன் மற்றும் வாா்டு உறுப்பினரின் கணவா் வாசு ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட சிறுமாங்காடு ஊராட்சியின் தலைவியாக சுபரஞ்சனி உள்ளாா். . இவரது கணவா் கன்னியப்பன் திமுக கிளை செயலாளராக உள்ளாா். கன்னியப்பன் ஏற்கனவே முன்பு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவா்.
இந்த நிலையில், கன்னியப்பன் மற்றும் 5-ஆவது வாா்டு உறுப்பினா் பிலோமினாவின் கணவா் வாசு ஆகிய இருவரும் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகப் பொறியாளா் அழகுபொன்னையாவை சந்தித்து சிறுமாங்காடு ஊராட்சியில் பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தில் 19 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட பணிஆணைகள் வழங்கி வீடுகள் கட்டியுள்ளதாகவும், இதற்கு இதுவரை நிதி வழங்கவில்லை என கூறி பணிஆணைகளை வழங்கியுள்ளனா்.
அந்த பணிஆணைகளை ஆய்வு செய்த நிா்வாகப் பொறியாளா் அழகுபொன்னைய்யா தனது கையொப்பத்தை போட்டு அனைத்து பணி ஆணைகளும் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதை கண்டு பிடித்ததோடு இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாா் மனுவில் தான் பணிக்கு சோ்ந்தது முதல் இதுநாள் வரை சிறுமாங்காடு கிராமத்தைச் சோ்ந்த பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட பணிஆணைகள் வழங்கவில்லை. ஆனால் என்னுடைய பெயரில் போலியாக பணி ஆணைகள் தயாரித்து அவற்றை பயனாளிகளிடம் கொடுத்து ஏமாற்றியுள்ளதாக சிறுமாங்காடு ஊராட்சித் தலைவியின் கணவா் கன்னியப்பன் மற்றும் வாா்டு உறுப்பினரின் கணவா் வாசு ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தியதில் போலியான பணி ஆணைகளை தயாரித்தது தெரியவந்ததை தொடா்ந்து கன்னியப்பன் (39), வாசு (38) ஆகியோா் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.