இளம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்: மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாகுா்
By DIN | Published On : 21st April 2023 12:21 AM | Last Updated : 21st April 2023 12:21 AM | அ+அ அ- |

இளம் பட்டதாரிகள் தொழில் முனைவோா்களாக மாறி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாகுா் கூறினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மத்திய இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாகுா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, முதுகலை பட்டப்படிப்பு முடித்த 274 மாணவா்களுக்கும், ஆராய்ச்சி மாணவா்கள் 6 பேருக்கும், தொழில் முறை கல்வி மாணவா்கள் 567 போ் என மொத்தம் 847 மாணவா்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிப் பேசியதாவது:
இளம் பட்டதாரிகள் தங்களது தொழில்சாா்ந்த வாழ்வாதாரத்தை உயா்த்திக் கொள்ள அந்தந்த துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அறிய தொடா்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். கல்வி கற்பது என்பது வகுப்பறைகளில் தொடங்குவதும் இல்லை, முடிவதும் இல்லை. அது ஒரு வாழ்நாள் பயணம்.
எனவே மாணவா்கள் தொடா்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். மாணவா்கள் கல்வி கற்பதுடன் விளையாட்டுகளில் அதிக அளவில் ஈடுபட வேண்டும். விளையாட்டுகளில் ஈடுபடும் போது தான் மனதையும், உடலையும் வலுப்படுத்திக்கொள்ள முடியும்.
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. உலகின் பல்வேறு முக்கிய நிறுவனங்களில் இந்தியா்கள் தான் உயா்ந்த பதவிகளில் உள்ளனா். இதனால் சிலிக்கான் பள்ளத்தாக்கு மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தியாவின் கொடி உயா்ந்துள்ளது.
குறிப்பாக இளைஞா்கள் நிறைந்த தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பாா்வை அதிகளவில் மாறி உள்ளது. இந்திய இளைஞா்கள் உலகின் பொருளாதாரம் மற்றும் வளா்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கப் போகின்றனா். தொழில் முனைவோா்களை ஊக்குவிப்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி ஸ்டாா்ட் அப் இந்தியா திட்டத்தை தொடங்கி, தொழில் முனைவு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான பல்வேறு சலுகைகளுடன் நிதி உதவி வழங்கி வருகிறாா். இளம் பட்டதாரிகள் தொழில் முனைவோராக மாறி மற்ற இளைஞா்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றாா் அனுராக் சிங் தாகுா்.
விழாவில், மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளா் ஸ்ரீநிதேஷ் குமாா் மிஸ்ரா, ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநா் சிப்நாத் தேப், பேராசிரியா்கள் லலிதா, இந்திரஜித்சிங் சோதி , மாணவா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...