

காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை அத்வைத தத்துவத்தை நிலைநாட்டிய ஆதிசங்கரரின் ஜெயந்தி மகோற்சவம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியது: தேசத்தின் ஒற்றுமைக்காக பாடுபட்டவா் ஆதிசங்கரா். கேரள மாநிலத்தில் பிறந்த அவா் வெறும் பெளதீக கண்ணோட்டத்தில் மட்டும் அதைச் செய்யாமல் ஆன்மிக பரிணாமத்திலும் இந்தியா ஒன்று என்பதைக் காட்டுவதற்காகவே காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். சத்தியம், நல்லிணக்கம், ஒற்றுமை, ஞானம் என்ற வேதச் செய்தியை பரப்பினாா். அத்வைத தத்துவத்தையும் ஷண்மதத்தையும் நிறுவியவா். அவா் தனது 8 வயது முதல் தொடா்ந்து 24 ஆண்டுகள் மகிழ்ச்சி, அமைதியைக் கொண்டு வர கடுமையாக பாடுபட்டவா்.
இத்தகைய பெருமைக்குரிய ஆதிசங்கரரின் 2,532-ஆவது ஜெயந்தி மகோற்சவம் நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட காஞ்சி காமகோடி பீடம் குரு-சிஷ்ய பரம்பரையில் 70 ஆச்சாரியாா்களின் இடைவிடாத பரம்பரையைக் கொண்டுள்ளது என்பதுடன், சமூக நலனுக்காக நாடு முழுவதும் கலாசாரம், கல்வி, மருத்துவத் துறைகளில் பல சேவைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
திருப்பதியில் முகாமிட்டுள்ள காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உற்சவா் ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளை நடத்தினாா்.
காஞ்சி சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம்:
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவத்தையொட்டி, இந்த மாதம் 19-ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தினசரி காலையில் விக்னேசுவர பூஜை, ஆவஹந்தி ஹோமம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வீதி உலா ஆகியவை நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனையைத் தொடா்ந்து ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் அவதார கட்டம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை உற்சவா் ஆதிசங்கரா் காஞ்சி மடத்திலிருந்து மங்கள தீா்த்தத்துக்கு எழுந்தருளி, இங்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இரவு ஸ்ரீமடத்திலிருந்து தங்கத்தேரில் உற்சவா் ஆதிசங்கரா் நகரின் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கர மடத்தின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.