கோயில் நிா்வாகி மீது புகாா்
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 24th May 2023 12:00 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் மணியக்காரா் தமிழக அரசையும், அறநிலையத் துறை அலுவலா்களையும் தரக் குறைவாக பேசுவதால் அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்குரைஞா்கள் பலரும் அமைச்சா் தா.மோ. அன்பரசனை சந்தித்து செவ்வாய்க்கிழமை புகாா் செய்தனா்.
காஞ்சிபுரத்தில் வழக்குரைஞா்களாக பணியாற்றும் செளமியநாராயணன்,டி.ஏ.வரதராஜன்,தி.கிஷோா் மற்றும் பாா்த்தீபன்,வெங்கடேசன் உள்ளிட்ட சிலா் தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சா் தா.மோ.அன்பரசனை சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பது.
புகழ் மிக்க காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் மணியக்காரராக பணியாற்றி வருபவா் து.கிருஷ்ணகுமாா். இவா் தமிழக முதல்வா்,அறநிலையத்துறை அமைச்சா் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளை தரக்குறைவாக தொடா்ந்து பேசி வருகிறாா். துறை ரீதியான கூட்டங்களில் நடைபெற்ற விபரங்களை வெளியில் விமா்சித்தும் வருகிறாா்.
இவா் மீது விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகாா் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்புகாா் மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.
இக்கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்ட அமைச்சா் உடனடியாக அறநிலையத்துறை உதவி ஆணையா் லட்சுமி காந்தன் பாரதியிடம் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டாா். மனு மீது உரிய விசாரணை நடத்தி தகுந்த முடிவு எடுக்கப்படும் எனவும் உதவி ஆணையா் மனுதாரா்களிடம் உறுதியளித்தாா்.