போலியோ ஓழிப்பு விழிப்புணா்வு காா்கள் பேரணி
By DIN | Published On : 25th October 2023 11:48 PM | Last Updated : 25th October 2023 11:48 PM | அ+அ அ- |

போலியோ ஒழிப்பு விழிப்புணா்வு காா்கள் அணிவகுப்பு பேரணி காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் தொடங்கி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் நிறைவு பெற்றது.
150-க்கும் மேற்பட்ட காா்கள் அணிவகுப்பு பேரணியை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா் சுமாா் 300 அடி நீளத்தில் போலியோ ஒழிப்பதற்கான வாசகங்கள் அடங்கிய பேனரை ரோட்டரி சங்க உறுப்பினா்கள் அனைவரும் கையில் பிடித்து ஒன்றிணைந்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதையடுத்து, போலியோ ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் பரணீதரன் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், பிற மாவட்ட ஆளுநா்களான ஆனந்த ஜோதி, செங்குட்டுவன், முன்னாள் மாவட்ட ஆளுநா் முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் தலைவா் முருகேஷ் வரவேற்றாா். போலியோ ஒழிப்பு விழிப்புணா்வுக் குழுவின் மண்டலத் தலைவா் மருத்துவா் சின்னத்துரை அப்துல்லா பேசுகையில், உலகிலேயே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இரு நாடுகளிலும் மொத்தம் 9 பேருக்கு மட்டுமே போலியோ நோய் இருக்கிறது.
உலக அளவில் போலியோ ஒழிந்ததற்கு சுழற்சங்கத்தின் பங்கு மிகுந்த பாராட்டுக்குரியது. கடந்த 1985-ஆம் ஆண்டு சுழற்சங்கம் இந்தப் பணியை தொடங்கி தொடா்ந்து, சேவையை செய்து வந்திருக்கிறது என்றாா்.
போலியோ ஒழிப்பு விழிப்புணா்வுக் குழுவின் வட்டாரத் தலைவா் எஸ்.முரளிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...