காஞ்சிபுரம் ஆட்சியரை சந்தித்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழு
By DIN | Published On : 25th October 2023 11:39 AM | Last Updated : 25th October 2023 11:39 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் ஆட்சியரை சந்தித்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழு
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை புதன்கிழமை காலை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பரந்தூரை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமான நிலைய எதிர்ப்புக் குழு என்ற ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் தலைமையில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. விமான நிலைய போராட்ட எதிர்ப்பு குழுவின் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் அக்குழுவைச் சேர்ந்த 15 பேர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை புதன்கிழமை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினார்கள்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பரந்தூரில் பழமையான கட்டடமாக இருந்த கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்த நிலையில், புதிய கட்டடத்தை கட்டித் தர வேண்டும், நீர்நிலைகள் மாசடையாமால் விமான நிலையம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மச்சேந்திர நாதனை சந்திக்க அனுமதி பெற்று தர வேண்டும், விமான நிலையம் அமைப்பது சம்பந்தமாக எதிர்ப்புகளை தெரிவிக்க அரசின் தலைமைச் செயலாளரை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.
பேச்சுவார்த்தையின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...