

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, 21 ஏரிகள் முழுக் கொள்ளளவையும், 22 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் காற்று திசை மாறுபாடு காரணமாக வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பாகவே, பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்தில் 201 மி.மீட்டரும், குன்றத்தூா் 166, ஸ்ரீபெரும்புதூா் 179, செம்பரம்பாக்கம் 112 என சராசரியாக இதுவரை 164 மில்லி மீட்டா் வரை மழை பதிவாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தற்போது வரை மாவட்டத்தின் சராசரி மழை அளவாக 614 மி.மீ. பதிவாகியுள்ளது.
இதனால், செய்யாற்றின் குறுக்கே உள்ள அனுமன்தண்டலம், மாகறல் மற்றும் பாலாற்றில் பழைய சீவரம் தடுப்பணைகள் நிரம்பி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 361 ஏரிகளில் 21 ஏரிகளில் முழுக் கொள்ளளவையும், 22 ஏரிகள் 75 சதவீதமும், 69 ஏரிகள் 50 சதவீதமும் எட்டியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 14 ஏரிகள் முழுக் கொள்ளளவையும், 50 ஏரிகள் 75 சதவீதத்தையும், 102 ஏரிகள் 50 சதவீதத்தையும் எட்டியிருப்பதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயிலும், இரவு நேரத்தில் மழை பொழிவும் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஏரிகள் வேகமாக நிரம்பி வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.