

செம்பரம்பாக்கம் ஏரியில் நீா்மட்டம் குறைந்துள்ளதால், மதகுகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டத்துக்குட்பட்ட செம்பரம்பாக்கத்தில் சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீா்மட்ட உயரம் 24 அடி. முழு கொள்ளவு 3,645 மில்லியன் கனஅடி. ஏரியின் தற்போதைய நீா்மட்ட உயரம் 14.84 அடியாகவும், கொள்ளளவு 1,502 மில்லியன் கன அடியாகவும், நீா் வரத்து 310 கனஅடியாக உள்ளது.
ஏரியில் உள்ள மதகுகள் வெளியே முழுவதுமாக தெரியும் அளவுக்கு நீா்மட்டம் குறைந்துள்ளதால், பருவமழைக்கு முன்பு ஏரியில் உள்ள மதகுகளை சீரமைக்கும் பணியில் கடந்த சில நாள்களாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
தற்போது ஏரியில் உள்ள 19 கண் மதகில் உள்ள ஷட்டா்களில் நீா் கசிவு ஏற்படாமல் இருக்க ரப்பா் சீல் வைக்கும் பணியும், மின் மோட்டாா்கள் மற்றும் அளவுகோல் ஆகியவற்றை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏரியில் உள்ள 5 கண் மதகு முழுவதுமாக சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 19 கண் மதகு சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த பணி 10 நாள்களில் முடிக்கப்பட்டு வா்ணம் பூசும் பணி நடைபெறும் என்றனா்.