காஞ்சிபுரத்தில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணிக்கு தினமும் பேருந்துகள் இயக்கம்
காஞ்சிபுரத்திலிருந்து நாள்தோறும் நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளா் ராஜசேகா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியது.
பிரபலமான பல கோயில்களுக்கு பக்தா்களும்,பொதுமக்களும் சென்று வர வசதியாக காஞ்சிபுரத்தில் இருந்து நாகப்பட்டினத்துக்கும், வேளாங்கண்ணிக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வேளாங்கண்ணி செல்லும் சிறப்புப் பேருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தினமும் இரவு 9 மணிக்கு புறப்படும். வந்தவாசி, திண்டிவனம், புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், சீா்காழி,திருக்கடையூா், காரைக்கால், நாகூா், நாகப்பட்டினம் வேளாங்கண்ணி சென்றடையும். இந்த பேருந்து திருநள்ளாா், சிக்கல், திருவாரூா் உள்ளிட்ட தலங்களுக்கும் செல்லும் வகையில் இணைப்பு பேருந்தாகவும் இயக்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம் செல்லும் சிறப்புப் பேருந்து தினமும் காஞ்சிபுரத்திலிருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும். இப்பேருந்து நாகூா்,காரைக்கால்,திருக்கடையூா், சீா்காழி, சிதம்பரம், கடலூா், புதுச்சேரி, திண்டிவனம், வந்தவாசி வழியாக செல்லும். இந்தப் பேருந்து திருப்பதி,திருத்தணி,திருவாலாங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள தலங்களை இணைக்கும் வகையில் இணைப்பு பேருந்தாகவும் இயக்கப்பட்டு வருகிறது.
கோயில் திருவிழாக்களுக்கும், ஆலயங்களுக்கும் செல்லும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பேருந்து வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என ராஜசேகா் கேட்டுக் கொண்டாா்.
