ராமாநுஜா் அவதார உற்சவம்: 
தங்கப் பல்லக்கில் வீதி உலா

ராமாநுஜா் அவதார உற்சவம்: தங்கப் பல்லக்கில் வீதி உலா

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ராமாநுஜா் அவதார உற்சவத்தின் முதல் நாளான வெள்ளிக்கிழமை உற்சவா் ராமாநுஜா் தங்க பல்லக்கில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் பழைமை வாய்ந்த ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தாணுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

இக்கோயிலில், வருடந்தோறும் சித்திரை மாதம் ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவ விழாவும், ராமாநுஜா் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், இந்த கோயிலில், பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில் காலை - மாலை நேரங்களில் உற்சவா் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதையடுத்து 10 நாள்கள் நடைபெறும் ராமாநுஜா் அவதார திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. அவதாரத் திருவிழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை உற்சவா் ராமாநுஜா் தங்கப் பல்லக்கில் வீதி உலா வந்தாா்.

ராமாநுஜா் அவதார திருவிழாவின் 9-ஆம் நாளான மே 11-ஆம் தேதி திருத்தோ் திருவிழாவும், மே 13-ஆம் தேதி கந்தப் பொடி வசந்தம் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com