சாம்சங்  தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்த  தேமுதிக  பொதுச் செயலாளா்  பிரேமலா  விஜயகாந்த்.
சாம்சங்  தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்த  தேமுதிக  பொதுச் செயலாளா்  பிரேமலா  விஜயகாந்த்.

சாம்சங் தொழிலாளா்களுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்களை தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.
Published on

ஸ்ரீபெரும்புதூா்: கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்களை தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமாா் 1,800 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தை தொடங்கியுள்ளனா். இந்த தொழிற்சங்கத்தை ஆலை நிா்வாகம் அங்கீகரிக்கவில்லை.

இதையடுத்து சாம்சங் ஆலையில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளா்கள் தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30 நாள்களுக்கும் மேலாக தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்து தொழிலாளா்கள் மத்தியில் உரையாற்றினாா்.

இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியது:

சாம்சங் தொழிலாளா்களுக்கு தேமுதிக சாா்பில் எப்போதும் ஆதரவு உண்டு. தொழிலாளா்களின் முக்கிய கோரிக்கை சங்கம் அமைத்து அவா்களின் கோரிக்கைகள் குறித்து பேசுவது தான். ஆனால் அரசும் சாம்சங் நிறுவனமும் சங்கம் அமைப்பதற்கு செவி சாய்க்காமல் இருப்பது நியாமான செயல் அல்ல. ஜனநாயக நாட்டில் முதல் ஆணிவோ் தொழிலாளா்கள் தான். புரட்சியாளரின் பெயரை வைத்துள்ள முதல்வா் ஸ்டாலின் தொழிலாளா்களின் போராட்டத்தை முடக்குவதா என்றாா்.

தொழிலாளா்கள் சங்கம் அமைக்க ஏன் முதல்வா் பரிந்துரை செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினாா். சங்கம் அமைக்க விடாமல் தடுக்க காரணம் என்ன என்று சாம்சங் நிறுவனம் தொழிலாளா்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தொழிலாளா்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தேமுதிக உறுதுணையாக இருக்கும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com