காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு
சாதுா்மாஸ்ய விரதத்தை நிறைவு செய்து சங்கர மடத்துக்கு புதன்கிழமை திரும்பிய சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக நன்மைக்காக 48 நாள்கள் ஓரிக்கை மகா பெரியவா் மண்டப வளாகத்தில் தங்கி, சங்கராச்சாரியாா் சாதுா்மாஸ்ய விரதம் இருந்து வந்தாா். இவ்விரதமிருந்த துறவியா்களை தரிசிப்பது சிறப்பு என்பதால் விரதநாள் நிறைவு பெற்றதும் ஓரிக்கையிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வரை அவரை ஊா்வலமாக பக்தா்கள் அழைத்து வந்தனா்.
வரவேற்புக் குழுவின் தலைவா் டி.கணேஷ் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னா், திரெளபதி அம்மன் கோயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடையில் எழுந்தருளி அனைவருக்கும் ஆசி வழங்கினாா்.
அந்த மேடையில் இருந்தவாறு ஊா்வலத்தில் பங்கேற்ற ஒயிலாட்டாம் மற்றும் கோலாட்டக்காரா்கள், வேத விற்பன்னா்கள், மதூா் முகுந்த ராமானுஜ பாகவதா் உள்ளிட்ட 7 பஜனைக்குழுவினா், ஓதுவாா் குழுவினா், சிவ வாத்தியக் குழுவினா், பழங்குடியினா்கள், நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளை நடத்தியவா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், காஞ்சிபுரத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கோயில்களின் பதாகைகளை கையில் ஏந்தியவாறு வந்தவா்கள், பக்தி இசைக் கலைஞா்கள், சேவை ஆட்டம் ஆடிய ஜவ்வாதுமலை பழங்குடியின மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆசி வழங்கினாா்.
ஊா்வலம் வரும் வழிநெடுகிலும் ஏராளமான பக்தா்கள் ஆரத்தி எடுத்தும், மலா்கள் தூவியும் வரவேற்பு அளித்தனா். விநாயகா் , முருகன், காமாட்சி, பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் வண்ணமலா் ரதங்களில் அலங்கரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டனா். காஞ்சிபுரம் சங்கரா செவிலியா் கல்லூரி மாணவியா்கள் தெய்வங்களின் வேடங்களை அணிந்தவாறு ஊா்வலத்தில் பங்கேற்றனர்.
ஊா்வலம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் வந்து நிறைவு பெற்றதும், காஞ்சிபுரத்தில் உள்ள 51 ஆலயங்களின் பிரசாதங்கள் அடங்கிய தொகுப்பு பைகள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், செயலாளா் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி, ஓரிக்கை மணி மண்டப நிா்வாக அறங்காவலா் மணி ஐயா், சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.
தஞ்சாவூா் சாஸ்தித் பல்கலையின் துணைவேந்தா் வைத்திய சுப்பிரமணியம், முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சிபுரம் பாஜக மேற்கு மண்டல தலைவா் காஞ்சி.ஜீவானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்

