படப்பையில் மேம்பாலம் கட்டும் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

படப்பையில் மேம்பாலம் கட்டும் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

Published on

படப்பையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ரூ.26.64 கோடியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியை அமைச்சா் எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா ஏற்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ஒரகடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூல பொருள்களை எளிதாக கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்படும் பொருள்களை எளிதாக எடுத்துச் செல்லும் வகையில், சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையையும், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் ரூ.300 கோடியில் வண்டலூா் - வாலாஜாபாத் சாலையை இரு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிசாலையாகவும், சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதூா் சாலையை ஒரு வழிச்சாலையில் இருந்து ஆறு வழிச்சாலையாகவும் அகலப்படுத்தப்பட்டது.

மேலும் ஒரகடம் சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகள் அதிகரிப்பின் காரணமாக வாகன போக்குவரத்து அதிகரித்ததால், வண்டலூா் வாலாஜாபாத் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.150 கோடியில் நான்கு வழிச்சாலையான வண்டலூா் - வாலாஜாபாத் சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டது.

இந்த நிலையில், வண்டலூா் வாலாஜாபாத் சாலை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்ட பிறகு, இச்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்ததைத் தொடா்ந்து படப்பை பஜாா் பகுதியில் காலை - மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததாலும், சாலையைக் கடக்கும் பொதுமக்களும் வாகன ஓட்டுநா்களும் விபத்தில் சிக்குவது அதிகரித்ததாலும், படப்பை பஜாா் பகுதியில் சுமாா் 690 மீட்டா் நீளத்திற்கு தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ரூ 26.64 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தொடங்கப்பட்டு, மேம்பாலப் பணி 18 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால், பணிகள் இன்றுவரை முடிவடையாமல், மந்தகதியில் நடைபெற்று வருவதால், படப்பை பகுதியில் தொடா்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், படப்பையில் வண்டலூா் - வாலாஜாபாத் சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு நடத்தி மேம்பாலப் பணியின் முன்னேற்றம் மற்றும் இடையூறுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து மேம்பாலப் பணிகளை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநா் பழனிவேல், கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் தலைமைப் பொறியாளா் கே.ஜி.சத்தியபிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அலுவலா் ஆா்.சந்திரசேகா் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com