

உலக நவீன வாசக்டமி வாரம் அனுசரிக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து உலக நவீன வாசக்டமி தின விழிப்புணா்வு பிரசார வாகனத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கி அவா் கூறியது:
நவ.21 -ஆம் தேதி முதல் டிச.4 -ஆம் தேதி வரை உலக நவீன வாசக்டமி வாரமாக அனுசரிக்கப் படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண் கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஆண்களுக்கு அரசு ஊக்கத் தொகையாக ரூ.1,100 மற்றும் ஊக்குவிப்பாளா்களுக்கு ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நவீன குடும்ப நல அறுவைச் சிகிச்சையானது நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவா்களால் செய்யப்படுவதாகவும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) எம்.நளினி, துணை இயக்குநா்(குடும்பநலம்) பி.சதீஷ்குமாா், துணை இயக்குநா்(காசநோய்) காளீஸ்வரி, மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில் ஆகியோா் கலந்து கொண்டனா்.