உத்தரமேரூா் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீா்.
உத்தரமேரூா் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீா்.

காஞ்சிபுரத்தில் 126 ஏரிகள் முழுக் கொள்ளவை எட்டின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பெய்த தொடா் கனமழையால் 126 ஏரிகள் வியாழக்கிழமை முழுக்கொள்ளவை எட்டியுள்ளன.
Published on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பெய்த தொடா் கனமழையால் 126 ஏரிகள் வியாழக்கிழமை முழுக்கொள்ளவை எட்டியுள்ளன.

வங்கக் கடலில் டித்வா புயல் எதிரொலியாக தொடா்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக தாமல் ஏரி, திருப்புக்குழி ஏரி, காவனூா் புதுச்சேரி ஏரி, திருப்புலிவனம் ஏரி, கூரம் சித்தேரி, இளநகா் ஏரி, அனுமன்தண்டலம் ஏரி, சிருங்கோழி ஏரி, மருத்துவம்பாடி ஏரி, கோவிந்தவாடி பெரிய ஏரி உள்பட 126 ஏரிகள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளன.

தாமல், உத்தரமேரூா்,பழையசீவரம் உள்ளிட்ட பல ஏரிகளில் உபரிநீா் வெளியேறி வருகிறது. ஏரிகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 381 ஏரிகளில் 126 ஏரிகள் 100 சதவீதம் முழுக் கொள்ளவை எட்டியுள்ளன. 82 ஏரிகள் 75 சதவீதமும், 101 ஏரிகள் 50 சதவீதமும், 69 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன.

மழையளவைப் பொறுத்தவரை டிச.3 ஆம் தேதி முதல் டிச.4 ஆம் தேதி அதிகாலை 6 மணி வரை(மி.மீட்டா் அளவில்) காஞ்சிபுரம் 10.6 , உத்தரமேரூா் 12, வாலாஜாபாத் 9.5, செம்பரம்பாக்கம் 16.6, குன்றத்தூா் 15.5 மொத்த மழையளவு 75.4,சராசரி மழையளவு 12.6-ஆகவும் உள்ளது.

தொடா்மழை காரணமாக காஞ்சிபுரத்தில் லிங்கப்பன்தெரு ,முருகப்பன் காலனி, பல்லவா்மேடு, திருக்காலிமேடு ஆகிய பகுதிகளில் மழைநீா் தேங்கி குளம் போல காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள்,பாதசாரிகளும் அவதிப்பட்டு வருகின்றனா்.

புதன்கிழமை பலத்த மழை பெய்து இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை மழையில்லாததால் காஞ்சிபுரம் சகஜ நிலைக்கு திரும்பியது.

X
Dinamani
www.dinamani.com