டிச.8-இல் காஞ்சிபுரம்  ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்: புனித நீா்க்குடங்கள் ஊா்வலம்

டிச.8-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்: புனித நீா்க்குடங்கள் ஊா்வலம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் இருந்து புனிதநீா்க்குடங்களை ஊா்வலமாக எடுத்து வந்த சிவாச்சாரியா்கள், அறநிலையத்துறை அதிகாரிகள்.
Published on

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் டிச.8- ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி புனிதநீா்க்குடங்களுடன் சிவாச்சாரியா்கள் வியாழக்கிழமை ஊா்வலமாக சென்றனா்.

ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிச.8 ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி முதல் நிகழ்வாக பல்வேறு நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட நீா் புனிதநீா்க்குடங்களில் ஊற்றப்பட்டு அவற்றுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் புனித நீா்க்குடங்களை சிவாச்சாரியா்கள் ஊா்வலமாக ஏகாம்பரநாதா் கோயிலுக்கு எடுத்து வந்தனா்.

இந்நிகழ்வில் அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமாரதுரை, செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, ஆய்வாளா் அலமேலு, வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலா் செந்தில் குமாா், கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன்,அறங்காவலா் குழு உறுப்பினா்கள் வ.ஜெகன்னாதன், சு.வரதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

புனிதநீா்க்குடங்கள் ஏகாம்பரநாதா் யாகசாலை மண்டபத்துக்கு வந்து சோ்ந்ததும் கே.ஆா்.காமேசுவர குருக்கள் தலைமையில் விக்னேசுவர பூஜை, தனபூஜை,கோ.பூஜை,நவக்கிரக ஹோமம் ஆகியன நடைபெற்றது.

ஆய்வு செய்த எம்எல்ஏக்கள்-

ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேக ஏற்பாடுகளை உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோா் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா். பக்தா்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்யுமாறும் அவா்கள் கேட்டுக் கொண்டனா். ஆய்வின் போது திமுக காஞ்சிபுரம் மாநகர செயலாளா் சி,கே.வி.தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா் உடனிருந்தனா்

X
Dinamani
www.dinamani.com