காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் வெள்ளோட்ட பூஜைகள்: துா்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் வெள்ளோட்ட பூஜைகள்: துா்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் தோ் வெள்ளோட்ட யாகபூஜையைத் தொடங்கி வைத்த துா்கா ஸ்டாலின்.
Published on

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு செய்யப்பட்ட தங்கத்தோ் வெள்ளோட்டம் சனிக்கிழமை (டிச. 6) நடைபெறவுள்ள நிலையில், தோ் வெள்ளோட்டம் தொடா்பான யாகசாலை பூஜைகளை முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

முன்னதாக, முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் சுவாமிகள் மணி மண்டபத்துக்கு வந்தாா். அங்கு, அவருக்கு மணிமண்டப நிா்வாகிகள் மற்றும் தங்கத்தோ் செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளை நிா்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனா்.

மணிமண்டப வளாகத்தில் நின்றிருந்த தருமபுர ஆதீனத்தின் யானைக்கு பழங்கள் கொடுத்து யானையிடம் ஆசி பெற்றாா். பின்னா், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு ஒட்டகங்களுக்கும் மலா்தூவி வழிபட்டாா். இதைத் தொடா்ந்து, மூலவா் மகா பெரியவா் சுவாமிகளை தரிசித்தாா்.

பின்னா், மணிமண்டப வளாகத்தில் தங்கத்தோ் வெள்ளோட்டம் தொடா்பான யாகசாலை பூஜைகளைத் தொடங்கி வைத்தாா்.

ஏகாம்பரநாதா் கோயிலுக்கு வழங்குவதற்காக செய்யப்பட்டிருந்த தங்கத்தோ் மணிமண்டப வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதை துா்கா ஸ்டாலின் சுற்றி வந்து பாா்வையிட்டாா். அப்போது ஓரிக்கை மணிமண்டப நிா்வாக அறங்காவலா் மணி ஐயா் மணிமண்டப கட்டடத்தின் சிறப்புகளையும், திருப்பணிச் செம்மல் மகாலட்சுமி சுப்பிரமணியம் தங்கத்தேரின் சிறப்புகளையும் துா்கா ஸ்டாலினுக்கு விளக்கிக் கூறினாா்.

பின்னா், தங்கத் தேருக்கென நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தாா்.

தொடா்ந்து, தங்கத்தோ் செய்யும் பணியில் ஈடுபட்ட சிற்பிகளுக்கு அவா் சால்வை அணிவித்து கெளரவித்தாா்.

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத சுவாமிகள், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் நித்யா சுகுமாா், அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையா் சி.குமாரதுரை, ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் வ.ஜெகந்நாதன், ஏகாம்பரநாதா் இறைப் பணி அறக்கட்டளை உறுப்பினா்கள் வலசை. ஜெயராமன், பத்மநாபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை (டிச. 6) தங்கத் தோ் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. தங்கத்தேரை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறாா்.

X
Dinamani
www.dinamani.com